வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா இன்று செவ்வாய்க்கிழமை (25.08.2026) மிகவும் சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இன்று காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகும். அதனைத் தொடர்ந்து துர்க்கை அம்மன் திருநடனத்துடன் உள்வீதியில் உலா வந்து தொடர்ந்து காலை-09 மணியளவில் சித்திரத் தேரில் ஆரோகணிப்பார். அதனைத் தொடர்ந்து சித்திரத் தேர்ப் பவனி ஆரம்பமாகும். சித்திரத் தேர் இருப்பிடம் சென்றடைந்ததைத் தொடர்ந்து இன்று பிற்பகல்-12.30 மணியளவில் சித்திரத் தேரிலிருந்து துர்க்கை அம்மன் பச்சை சாத்தி அவரோகணம் செய்யும் திருக்காட்சி இடம்பெறுமென மேற்படி ஆலய நிர்வாக சபையினர் தெரிவித்துள்ளனர்.



