சித்திரத் தேரில் வண்ணை வேங்கடேச வரதராஜப் பெருமாள் பவனி

 


யாழ்.வண்ணை வேங்கடேச ஸ்ரீ வரதராஜப் பெருமாள் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை (11.10.2024) காலை வெகுசிறப்பாகவும், பக்திபூர்வமாகவும்  இடம்பெற்றது.  

நேற்றுக் காலை-07 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஸ்ரீதேவி, பூமாதேவி சமேத வரதராஜப் பெருமாள் திரு நடனத்துடன் உள் வீதியில் எழுந்தருளி அதனைத் தொடர்ந்து சித்திரத் தேரில் ஆரோகணித்தார். சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து காலை-09 மணியளவில் அடியவர்களின் கோவிந்தா....கோவிந்தா என்ற கோஷங்களுடன் சித்திரத்தேர்ப் பவனி ஆரம்பமானது.

தேர்த் திருவிழாவை முன்னிட்டுச் சில ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்சணம் செய்தும், பெண் அடியார்கள் சிலர் கற்பூரச் சட்டிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர். தேர்ப் பவனியின் பின்னால் அடியவர்களின் பஜனை நிகழ்வும் நடைபெற்றது.

               



இதேவேளை, பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் இவ் ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.