நல்லூர் நீர்வளக் கண்காட்சியின் ஒரு பகுதியான ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் ஒன்பதாவது நாளான வியாழக்கிழமை 10.09.2026 மாலை 7 மணிக்கு யாழ்ப்பாணம் அரங்க செயற்பாட்டுக்குழுவின் பாடலும் பறையும் நிகழ்வும், வன்னிக்குளங்கள் : வான்பாயும் நினைவுகளும், வான்பாயாத நினைவுகளும் என்னும் தலைப்பில் நிலாந்தன் அவர்களின் உரையை தொடர்ந்து கலந்துரையாடலும் இடம்பெறும்.
நல்லூர் நீர்வள கண்காட்சியின் ஊருணி அரங்கில் இன்று புதன்கிழமை மாலை 7 மணிக்கு அரியாலை இளம் இசைக்கலைஞர்களின் பாரதி பாடல்கள் ஆற்றுகை இடம்பெறும்.
-----------------------------------------------------------------------------------------------------------
ஞாயிறு அன்று ஊருணி அரங்கில் மேடையேறும் வசந்தன்கூத்து
------------------------------------------------------------------------------
சுற்றுச் சூழலை பேணுவதற்கான மக்கள் இயக்கம் அவசியமானது - நல்லூர் நீர் கண்காட்சி கருத்தாடலில் வலியுறுத்து
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்ப்பாதுகாப்பு ஆய்வு முயற்சியான வஸ்பார் செயற்திட்டத்தின் நல்லூர் 2026 கண்காட்சியின் நான்காவது நாளின் போது 05.09.2026 நடைபெற்ற கோவில், குளம், காடு, கமம் என்ற தலைப்பின் கீழ் மூன்று கட்டடக்கலை துறைசார் நிபுணர்கள் கலந்துகொண்ட உரையாடல் வட்டம் இடம்பெற்றது.
இந்தியாவின் கோயம்புத்தூர் அம்ரிதா பல்கலைக்கழகத்தின் கட்டடக்கலைத் துறையின் மூத்த பேராசிரியரும், பரந்த ஒரு பார்வையில் இயற்கையோடு இசைவான வகையில் அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான சிந்தனைகளின் களமாக விளங்கும் இப் பல்கலைக்கழகத்தின் சார்பில் கண்காட்சிக்கு வந்திருப்பவருமான துணைப் பேராசிரியர் பிரதீக் சுதாகரன் அவர்களும், யாழ்ப்பாணத்தில் செயற்படுகின்ற மூத்த கட்டடக்கலை நிபுணரான திரு மயூரநாதன் அவர்களும், திரு ஒஸ்ரின் அலோசியஸ் அவர்களும் இக் கருத்தாடல் களத்தின் வளவாளர்களாகக் கலந்துகொண்டனர்.
கோவில் குளம் இரண்டும் இணைந்திருக்கும் ஒரு பாரம்பரியத்தைக்கொண்ட தமிழ் சமூகப் பின்னணியில் இவை இரண்டும் எப்போதும் இணைந்ததாக இருந்ததில்லை என்பதும், இல்லை எமது பரிணாம வளர்ச்சியில் வேறொரு தருணத்தில் இவை இணைக்கப்பட்டிருக்கலாம், அவற்றின் பயன்பாடு காரணமாக நீர்நிலையும் வழிபாட்டு இடங்களும் ஒன்றாகச் சேருகின்ற நிலை பரவலாக ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்தை மயூரநாதன் அவர்கள் முன்வைத்த போது, அதைப் போன்றே மூர்த்தி, தலம், தீர்த்தம் அல்லது இயற்கையும் இறையும் ஒருங்காக அமைந்திருக்கும் பின்புலம் இன்னும் கிராமங்களிலும், பெருநகரங்களிலும் அமைந்திருப்பது பற்றி விபரமாக ஆராயப்பட்டது.
Architecture அல்லது கட்டடக்கலை என்பது பன்முகத் தன்மை கொண்ட ஒரு பார்வை என்பதும், அதுபோன்ற மற்றைய துறைசார் பார்வைகளும் இணையும்போது தான் நவீன முறையில் நாம் சிந்தனைகளை சேர்த்து, பல புள்ளிகளை இணைத்து எமது இயற்கைக்கு பொருத்தமானதாகவும், உடல் நலத்திற்கு உகந்ததுமான கட்டுமானங்களை ஏற்படுத்தலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருந்தன. இதன்போது மரபுரிமை வழிவந்த நகரங்களிலும் வழிபாட்டிடங்கள் மரபுரிமை பேணுபவையாக இருக்கும் பொழுது அவற்றை தனித்து எடுத்துப் பாதுகாத்து, அவற்றை சுற்றியுள்ள பாரம்பரிய பழமைவாய்ந்த புராதனக் கட்டடங்கள் அழிக்கப்படுவதும், புதுமையின் முயற்சியாக மேற்கொள்ளப்படும் கட்டுமானங்கள் இவ்வாறான சிந்தனைக்கு மாறாகவே நடந்துவருவதன் கவலைக்குரிய விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
நல்லூர் ஆலயம், அதனது தொன்மையைப் புரிந்துகொண்ட எமது கேரள நாட்டு அன்பர் ஆலயத்தின் முன்வாசலில் புதிதாகக் கிளம்பியிருக்கின்ற கட்டடங்கள் கண்ணாடியும் அலுமினியமும் கொண்ட கட்டடங்களாகப் பார்வையளித்தது முரணாகத் தெரிந்ததை சுட்டிக்காட்டியிருந்த போது, அதுபோன்ற பரந்த சிந்தனைக்குட்பட்ட வகையில் யாழ்ப்பாணம் என்ற மரபுரிமை வழிவந்த பழைய நகரத்தின் புதிய வளர்ச்சிக்கு பழமையைப் பாதுகாக்கும் முயற்சிகள் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை என்பதை வந்திருந்தவர்கள் ஏற்றுக்கொண்டதும் கவனிக்கப்பட்டது.
காடுகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் ஏற்படுவதும், விவசாய நிலங்கள் விவசாயத்திற்கு அப்பாற்பட்ட முயற்சிகளுக்காகக் கைப்பற்றப்படுவதும், இவை எல்லாமே நிலத்தடி நீரைப் பேணுகின்ற வகையில் அமைந்திருக்கும் இயற்கையின் தொகுதிப் பிரிக்கும் முயற்சிகளாக, நீருக்குப் பாதகம் விளைவிக்கும் முயற்சிகளாக இருப்பதும் வலிந்து கூறப்பட்டிருந்தது.
இந்த இடத்திலே இவற்றைப்பற்றிய சிந்தனைகளை வேறுபல உதாரணங்களோடு, யாழ். கச்சேரி அருகே உள்ள பழைய பூங்கா உட்பட்ட அபிவிருத்திக்கும் பேணிப்பாதுகாத்தலுக்கும் இடையே உள்ள முரண்பாடு அல்லது இழுபறி நிலையைத் தாண்டி செல்வதற்குரிய குரலை மக்கள் இயக்கம் ஒன்று மேற்கொள்வதன் மூலம் தான் அதற்கான அழுத்தத்தைப் பயன்படுத்தி எமக்கு உகந்த வளர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை நாங்கள் நிலைநிறுத்த முடியும் என்பதை வந்திருந்தவர்கள் கூறிக்கொண்டார்கள்.
சில இடங்களில் சமூகத்தில் நிலவுகின்ற அறியாமையை ஒரு பகுதியினரின் நன்மைக்காக விட்டுக்கொடுக்கும் வகையில் அரசு இயங்கும் நிலையையும் நாம் பார்க்கிறோம். நல்லூர் என்ற நானூறு வருட வரலாறு கொண்ட தலைநகரம் ஒரு இராஜதானிக்கு கொடுக்கப்பட வேண்டிய முக்கியத்துவத்தைப் பெறுகிறதா என்றும், அதுபோலவே இவற்றை ஒழுங்கமைத்து உரியவகையில் கண்காணிப்பதற்குரிய வலுமிக்க கொள்கைகள் வகுக்கப்படுகின்றனவா, அந்தக் கொள்கைகள் நிலைநாட்டப்படுகின்றனவா, அவற்றிற்கு சமூகமாக நாம் தயாராக இருக்கின்றோமா என்பவையெல்லாம் புதிய கேள்விகளாக முன்வைக்கப்பட்டன.
இந்த இடத்திலே உள்ளூராட்சி அரசுகளாக அண்மையில் புதிதாகத் தெரிவுசெய்யப்பட்ட பல்வேறு பிரதேசங்களுக்குரிய பிரதேச சபைகளில் இவற்றை விளங்கி சிந்தித்து அதன்படி செயலாற்ற வல்லவர்கள் புதியவர்கள் பலபேர் முன்வந்திருக்கின்ற இன்றைய நிலையில் அவர்களை உற்சாகப்படுத்தி, அவர்களுக்குரிய அனுசரணைகளை வழங்கி கல்வி சமூகம் அவர்களுக்கு சாதகமாக செயற்படுவதற்குரிய வாய்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அந்த இடத்தில் வஸ்பார் செயற்திட்டம் வலிகாமத்தினூடாக ஊடறுத்துச் செல்லும் வழுக்கை ஆற்றின் நீரேந்து பிரதேசத்தில் அமைந்திருக்கும் நான்கு பிரதேச சபையினரையும் ஒன்றிணைத்து ஒருமுகமாக, அரசியல் வேறுபாடுகள் கட்சிகளின் அடையாளங்களிற்கு அப்பாற்பட்ட வகையில் நீர்வளத்தைப் பேணுகின்ற முயற்சிக்கு சாதகமாக இயங்க வல்லவர்களாக வலுப்படுத்திக்கொண்டு வருவது குறிப்பிடப்பட்டது. அந்தக்கருத்துக்கு ஒத்த வகையில் வழுக்கை ஆற்றுக்கான எதிர்காலத்தை, அதனுடைய ஆளுகையை அரசுடனும் அரச அலகுகளுடனும் கட்டுப்பாடுகளுக்கமைய மக்கள் மயப்படுத்தப்பட்ட சபையொன்று இயங்குவதன் நன்மையைப் பற்றியும் கூறிக்கொண்டு இக்கருத்தரங்கு நிறைவேறியது.
------------------------------------------------------------------------------------
ஊருணி அரங்கில் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ள நடன ஆற்றுகையும் உரையாடலும்
நல்லூர் நீர்க் கண்காட்சியின் நான்காவது நாளான இன்று சனிக்கிழமை 05.09.2026 மாலை 7 மணிக்கு ஊருணி அரங்கில் தனராஜ் இராசையா அவர்களின் "சுற்றிலும் இருந்து" என்கிற தொனிப்பொருளில் அமைந்த நடன ஆற்றுகையும்,
தொடர்ந்து "கோவில் - குளம் - காடு - கமம்" எனும் ஆய்வாளர்களின் உரையாடலும், கருத்துரைகளும் இடம்பெறும்.
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் உள்ள அமிர்தா விஸ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைப் பள்ளியில் (School of Architecture) இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வரும் திரு. பிரதீக் சுதாகரன் அவர்கள் உரைஞராகவும் பங்கேற்கிறார். மேற்படி உரையாடலில் திரு. இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன், திரு. ஒஸ்ரின் அலோசியஸ் ஆகியோரும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பிக்கின்றனர்.
பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் இடம்பெறும் மேற்படி நிகழ்வில் ஆர்வமுள்ள அனைவரையும் பங்கேற்று சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் ஏற்பாட்டாளர்கள்.
----------------------------------------------------------------------------------------
மூன்றாவது நாளான இன்று வெள்ளிக்கிழமை செம்முகம் குழுவினரின் பாடல் ஆற்றுகையும், கிணறுசார் வாழ்வியல் கருத்துரையும்
நல்லூர் நீர்வளக் கண்காட்சியின் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் இன்று வெள்ளிக்கிழமை 03.09.2026 மாலை 7 மணிக்கு பாடல் ஆற்றுகையும், கலை நிகழ்வும் இடம்பெறவுள்ளன.
செம்முகம் குழுவினரின் பாடல் ஆற்றுகையும், கிணறுசார் வாழ்வியல் என்ற தொனிப்பொருளில் பேராசிரியர் சிவாணி சண்முகதாஸ் அவர்களின் கருத்துரையும், கலந்துரையாடலும் இடம்பெறும்.
----------------------------------------------------------------------------------------------------
நல்லூர் நீர்வளக் கண்காட்சியின் ஊருணி அரங்கில் இன்று
பாடல் நிகழ்வும் அதனைத் தொடர்ந்து கண்ணகை வழி எனும் தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும் உரையாடலும் இடம்பெறும்.
----------------------------------------------------------------------------------------------------------------------
நல்லூர் நீர்க் கண்காட்சியில் பலரது கவனத்தையும் ஈர்த்த "நீர் தான் நீரே தான்" நாடக ஆற்றுகை
நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு பாரதியார் சிலைக்கருகில் உள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்றைய தினம் 02.03.2026 நல்லூர் நீர்க் கண்காட்சி மூன்றாவது முறையாக ஆரம்பமானது.
குறித்த நிகழ்வின் முக்கிய அம்சமாக செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "நீர் தான் நீரே தான்" நாடக ஆற்றுகை பலரது கவனத்தையும் ஈர்த்தது. வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட நீர்வள அதிகாரிகள், நீர் ஆர்வலர்கள் குறித்த நாடகத்தை பார்வையிட்டனர்.
பொதுக் கிணறுகளில் ஊரிலுள்ள குடும்பங்கள் தண்ணீரை பகிர்ந்து அளவாக பயன்படுத்திய காலம் போய், வீட்டுக்கொரு கிணறு மூலம் அளவாக வாளிகளில் தண்ணீரை அள்ளிய காலமும் கடந்து, இன்று காணிகளை சிறு சிறு துண்டுகளாக பிரித்து ஒவ்வொரு காணிக்கும் ஒரு குழாய்க்கிணறு அடித்து சமூகப் பொறுப்பின்றி நிலத்தடி நீரை வேண்டியளவுக்கு உறிஞ்சுவதால் கடல் நீர் உட் புகும் அபாயம் தொடர்பிலும், அதனூடாக வரும் விளைவுகளையும் தத்ரூபமாக குறித்த நாடகம் பதிவு செய்திருந்தது.
நாடகம் முடிவடைந்த பின் குறித்த நாடக உருவாக்கத்தினை பாராட்டி பலரும் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
குறித்த நீர்க் கண்காட்சியின் பாரம்பரிய ஊருணி அரங்கில் 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை தினமும் மாலை 7 மணி முதல் பல்வேறு கலை நிகழ்வுகளும், கருத்துரைகளும் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
------------------------------------------------------------------------------------------
எங்கள் கிணறுகளை ஆவணப்படுத்துவோம் - வடமாகாண நீர்வள தரவைக் கட்டமைப்பதில் நீங்களும் பங்காளராகுங்கள்
நல்லூர் முருகன் திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் (WASPAR) வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் (YWP) இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் நேற்றைய தினம் ஆரம்பமாகி இடம்பெற்று வருகின்றது.
11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்க் கண்காட்சியின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக உங்கள் பகுதிகளில் உள்ள வீட்டுக் கிணறுகள், பொதுக் கிணறுகள், விவசாயக் கிணறுகள், குழாய்க் கிணறுகள் ஆகியவற்றை உங்கள் கைபேசியூடாக பதிவு செய்து வடமாகாணத்தின் நிலத்தடி நீர்வளத் தகவலை ஒழுங்குபடுத்தி தரவுகளை கட்டமைக்கும் WASPAR செயற்திட்டத்தின் பங்காளராகி நீங்கள் ஒவ்வொருவரும் உதவ முடியும்.
அதனை கீழ்க் கண்ட சுலபமான வழிமுறையில் பதிவு செய்யலாம். முதலில் மேற்படி சுவரொட்டியின் வலது பக்க மேல் மூலையில் உள்ள QR குறியீடை உங்கள் கைபேசியை பயன்படுத்தி மின்வருடல் (scan) செய்யுங்கள்.
பின்னர் நீர்மூலத்திற்கு அருகில் இருந்து GPS இருப்பிடத்தை பதிவு செய்யுங்கள். அதன்பின்பு கிணறு அல்லது நீர்மூலம் தெளிவாகத் தெரியும் புகைப்படத்தை பதிவேற்றுங்கள். தொடர்ந்து பதிவை சேமியுங்கள்.
நீர்மூலம் தொடர்பிலான மேலதிக விபரங்களை உடனடியாகவோ பின்னரோ பூர்த்தி செய்யலாம். உங்கள் பங்கேற்பாளர் இலக்கத்தையும், 6 எண் குறியீட்டையும் பாதுகாப்பாக வைத்திருங்கள்.
GPS இருப்பிடமும் நீர்மூலப் புகைப்படமும் சேமிக்கப்பட்ட பதிவுகள் தினசரிக் குலுக்கலுக்கு தகுதி பெறும்.
முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட பதிவுகள் மட்டுமே 11-09-2026 அன்று இடம்பெறவுள்ள இறுதிக் குலுக்கலுக்கு தகுதி பெறும். குலுக்கலில் வெற்றிபெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
வரும் 10 ஆம் திகதி வரை ஒருவர் எத்தனை நீர்மூலங்களையும் அதன் GPS இருப்பிடத்தை சரியாக பதிவு செய்து, புகைப்படத்தை இணைத்து, தொடர்ந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளித்து ஆவணப்படுத்த முடியும்.
QR குறியீடை மின்வருட (Scan) முடியாதவர்கள் கீழேயுள்ள இணைப்பை பயன்படுத்தியும் குறித்த இணைப்பை திறந்து பதிவு செய்ய முடியும். https://www.tinyurl.com/wellsnorth
------------------------------------------------------------------------------------------------------------
முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்து
எதிர்காலச் சந்ததியினரின் நலன் கருதி நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில், முறையற்ற குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட பொருத்தமான பொறிமுறைகள் உருவாக்கப்படும் என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் வலியுறுத்தினார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப்பொருளிலான நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சி, இன்று (02.09.2026) புதன்கிழமை மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், முந்தைய காலங்களில் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகக் காணப்பட்டதுடன், மக்கள் கிணற்று நீரை நேரடியாகவே பருகி வந்தனர். ஆனால் தற்போது, குடிநீருக்காகப் போத்தல்களில் அடைக்கப்பட்ட நீரை அதிக விலைகொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 1950களுக்குப் பின்னர் நிலத்தடி நீரை உறிஞ்சும் குழாய்க் கிணறுகளின் பயன்பாடு கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளமை, முறையற்ற விதத்தில் அதிகளவான குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டமை மற்றும் கழிவுநீர் நிலத்தடி நீருடன் கலக்கின்றமை போன்ற காரணங்களால் நீரின் தரமும் அளவும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, குழாய்க் கிணறுகளின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தத் தகுந்த சட்ட நடவடிக்கைகளும், முறையான கண்காணிப்பு வழிமுறைகளும் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இதனைச் சாத்தியமாக்க உரிய தரப்பினருக்கு அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியது அவசியமாகும். மழைநீரை நிலத்தடியில் சேமிக்கும் திட்டங்களை விரிவுபடுத்துவதுடன், கழிவுநீர் மற்றும் உவர் நீர் நன்னீருடன் கலப்பதைத் தடுக்க முறையான முகாமைத்துவ நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். நிலத்தடி நீரைப் பாதுகாப்பது என்பது ஒவ்வொரு தனிநபரின் கூட்டுப் பொறுப்பாகும். விழிப்புணர்வுடன் செயற்பட்டு, எதிர்காலச் சந்ததியினருக்காக நமது நீர் வளங்களைப் பாதுகாக்கும் இவ்வாறான செயற்றிட்டங்களுக்கு அனைவரும் முழுமையான ஆதரவை வழங்க முன்வர வேண்டும்' எனத் தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாட்டில் வசித்தாலும் யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் நோக்கில் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பெரியவர்கள் எனச் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரையும் ஒன்றிணைத்து இவ்வாறான விழிப்புணர்வுத் திட்டங்களையும் கண்காட்சிகளையும் முன்னெடுத்து வரும் பேராசிரியர் சிறிஸ்கந்தராஜாவின் பங்களிப்பையும் ஆளுநர் பாராட்டினார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு மூன்றாவது ஆண்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, எதிர்வரும் 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை தினமும் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை நடைபெறும்.
நீரியல் ஆய்வுகள் ஊடாகப் பெறப்பட்ட பெறுபேறுகள், மக்கள் ஈடுபாட்டுடனான செயற்திட்ட அனுபவங்கள், வழுக்கையாறு மற்றும் கிராமியக் குளங்களை முறையான தொழில்நுட்ப அறிவுடன் தூர்வாருதல் தொடர்பான விபரங்கள் முப்பரிமாண தோற்றங்களாக, செய்திகளாக மற்றும் படங்களாக இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் தினமும் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, யாழ்ப்பாண மாநகர சபை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் இக்கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்ச்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெறுகின்றன.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், மருத்துவபீட பீடாதிபதி, கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் பணிப்பாளர், விவசாயத் திணைக்கள யாழ். மாவட்ட பிரதிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
நல்லூரில் மூன்றாவது முறையாக நீர்க் கண்காட்சி - இன்று ஆரம்பம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்றிட்டமும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டமும் இணைந்து வழங்கும் நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியானது மூன்றாவது முறையாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் 02.09.2026 புதன்கிழமை மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாக உள்ளது.
தொடர்ந்து 11.09.2026 வெள்ளிக்கிழமை வரை காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை இடம்பெறவுள்ள மேற்படி நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் மாலை 7 மணி முதல் கருத்துரைகளும் கலை, பண்பாட்டு, பாரம்பரிய நிகழ்வுகளும் அரங்கேற உள்ளன.
குறித்த நீர்வளம் பேணும் செயற்திட்டம் தொடர்பில் அதன் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் சிறிஸ்கந்தராஜா அவர்கள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவபீட மாநாட்டு மண்டபத்தில் நேற்று 01.09.2026 இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்த முக்கியமான விடயங்கள் வருமாறு,
ஆறு வருடங்களாக இடம்பெற்ற நீர் சார்ந்த ஆய்வு செயற்திட்டத்தில் தொடர்ச்சியாக ஒன்றிரண்டு பிரதேசங்களில் செய்யப்பட்ட நீரியல் ஆய்வுகள் தந்த பெறுபேறுகளையும் மக்களோடு இணைந்து செய்வதில் கிடைத்த அனுபவங்களையும் தொகுத்திருக்கிறோம்.
அதன் இறுதிப்பகுதியில் வழுக்கையாற்றை ஒரு பேசு பொருளாக சமூகத்திற்குள் கொண்டுவர எடுத்த முயற்சி ஊரவர்களின் கற்பனையையும் சேர்த்து பிரேதேச சபைகளுடன் இணைந்து எடுத்த முயற்சியுடன் ஆய்வுகள் குறித்து இன்னும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
அந்த அடிப்படையில் கிணறோடு சேர்ந்த வாழ்வியலில் தங்கியிருக்கும் ஒரு சமூகமாக நிலத்தடி நீரைப் பேணுவதற்கு கிணறுகளையும் பராமரித்தல் அவசியமானது என்பதும் அதற்கு அனுகூலமான வகையில் இருக்கின்ற ஊர்க் குளங்களை தூர்வார்ந்து பயனுள்ள வகையில் அவற்றில் நீர் தேக்குவது அவசியமானது.
கிராமிய குளமொன்றை கிராம மக்களின் ஈடுபாட்டோடு பல்வேறு சமூகத் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் தொழிநுட்ப அறிவையும் கருவிகளையும் பயன்படுத்தி பக்குவமாக தூர்வாருதல் தொடர்பிலும் அதில் கிடைக்கும் பாடங்களையும், மற்றும் பல்வேறு விடயங்களையும் முப்பரிமாண தோற்றங்களாக, செய்தியாக, படங்களாக இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தி உள்ளோம்.
கடந்த ஆண்டுகளை விட பல முனைகளில் நிலத்தடி நீர் சார்ந்த தெளிவை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பல்வேறு காட்சிகளையும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் வரும் இழப்புகள் பற்றியும் மக்கள் கருத்துகளையும் கேட்டு பதிவு செய்வதோடு மட்டுமல்லாமல் மக்களின் ஈடுபாட்டோடு முடிவெடுத்தலையும் செய்து வந்திருக்கிறோம். என்றார்.
நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி, வேம்படி மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வக் குழுக்கள் பலவற்றின் ஒத்துழைப்புகளுடன் நடைபெறும் நீர்க் கண்காட்சியில் கலந்துரையாடல்கள், மாதிரிகள், பதாகைகள், ஆய்வு விபரங்கள், பரிசுப் போட்டிகள், விளையாட்டுகள், பாரம்பரிய நிகழ்சிகள், குலுக்கல் பரிசுகள் ஆகியவை இடம்பெற உள்ளன.
நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பக்தர்கள் குறித்த நீர் கண்காட்சியில் பங்கேற்று வடமாகாண நீர்வளம் எதிர்நோக்கும் நெருக்கடிகள், அதற்கு மக்கள் கூட்டாக என்ன செய்யலாம்? போன்ற விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாத்து கரம் கோர்த்துப் பயணிக்க வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.























