வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உரிய முறையில் எரியூட்டி முகாமைத்துவம் செய்வதற்கான நிலையமொன்றை அமைப்பது தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் திங்கட்கிழமை (16.11.2026) மாலை யாழ்.சுண்டுக்குளியிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேநாயகன் தலைமையில் இடம்பெற்றது.
இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எஸ். சத்தியசீலன், வடக்கு மாகாணச் சுகாதார அமைச்சின் செயலாளர் திருமதி.ப.ஜெயராணி, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் அ. சோதிநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாம்பசிவம் சுதர்சன், வடக்கு மாகாணச் சுகாதாரப் பணிப்பாளர் மருத்துவர்- வி.பி.எஸ்.டி.பத்திரண, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடப் பீடாதிபதி பேராசிரியர்-ஆர். சுரேந்திரகுமாரன், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்), யாழ்.மாநகர சபை ஆணையாளர், மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், முதலீட்டாளர் தரப்பின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
வடக்கு மாகாணத்தில் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் கையாள்வதற்கும், தற்போதைய நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி அவற்றை எரியூட்டுவதற்குமான நிலையமொன்றைத் தனியார் முதலீட்டின் ஊடாக அமைப்பதற்கு முதலீட்டாளர் ஒருவர் முன்மொழிவை முன் வைத்திருந்தார். இதனையடுத் துக் குறித்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான சாத்தி யக் கூறுகள் தொடர்பாக இந்தக் கலந்துரையாடலில் ஆராயப்பட்டது. குறிப்பாக இத்தகைய நிலையத்தை அமைப்பதற்குப் பொருத்தமான இடத்தைத் தெரிவுசெய்தல், அதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு ஏற்பாடுகள், தொழில்நுட்பத் தேவைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகளுடன் கருத்துப் பரிமாறப்பட்டது.
மருத்துவக் கழிவுகளை உரியமுறையில் முகாமைத்துவம் செய்வதற்கான தேவையைக் கருத்திற் கொண்டு முதலீட்டுத் திட்டம் தொடர்பான மேலதிக விடயங்களை ஆராய்வதற்கான கலந்துரையாடலாக குறித்த கலந்துரையாடல் அமைந்திருந்தது.

