NallurWaterExibition2025

போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அபிவிருத்தி குறித்து சிந்தித்த ஒரு இனம் எங்களுடையது!- யாழ் இந்துக் கல்லூரியின் அதிபர் கருத்து


வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின்  ஒரு அங்கமாக 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில் அமைந்த நல்லூர் நீர்க் கண்காட்சியின் ஒன்பதாவது நாளான சனிக்கிழமையன்று 23.08.2025 மாலை குறித்த கண்காட்சி ஒருங்கிணைப்பில் இணைந்து பணியாற்றிய தன்னார்வலர்கள், மாணவர்களுக்கான ஊக்குவிப்பு சான்றிதழும், பரிசுகளும் வழங்கி வைக்கப்பட்டன. 

ஓய்வு நிலை பேராசிரியர் ந. சிறீஸ்கந்தராஜா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில்  யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான  ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன், யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் இரட்ணம் செந்தில்மாறன் மற்றும் நீர்வள சபை, நீர்ப்பாசனத் திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை உள்ளிட்ட பல தன்னார்வ அமைப்புகளை சேர்ந்த பிரதிநிதிகளும், ஆசிரியர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டிருந்தார்கள். 

இந்நிகழ்வில் பங்கேற்ற யாழ். இந்துக் கல்லூரியின் அதிபர் கருத்து தெரிவிக்கையில், 

மிக நீண்ட நாளைக்கு பிறகு நல்லூர் திருவிழாவுக்கு வந்திருக்கிறேன். உண்மையிலேயே நான் 1993, 1994 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் தியாகதீபம் திலீபன் அவர்களின் நினைவுத் தூபிக்கு பின்புறமாகவுள்ள பிராமணக்கட்டுக் குளப்பகுதி சுற்றாடலில் பொருண்மிய மேம்பாட்டு கழகத்தினர் அறிவியல் பொருளாதார கண்காட்சியை ஏற்பாடு செய்திருப்பார்கள். ஆறாம், ஏழாம் ஆண்டு படிக்கும் காலத்தில் அடிக்கடி அதனைப் பார்க்கப் போவோம். ஆக்கி வாயுவில் இருந்து மின்னை உருவாக்கும் இயந்திரத்தை இயங்கச் செய்வது, பேரூந்து நிலையத்தை பூங்காவாக மாற்றுவது, புகையிரத நிலைய வடிவமைப்பு, வழுக்கையாறு திட்டங்கள் போன்றவற்றையெல்லாம் போர் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலும் அபிவிருத்தியையும் குறித்து சிந்தித்த ஒரு இனம் எங்களுடையது. அதனை இப்போது நினைத்தாலும் புளாங்கிதமாக உள்ளது. நாங்கள் எங்களுடைய நிலம் சார்ந்து, சமூகம் சார்ந்து சிந்திக்கின்ற ஒரு இனமாக போராட்ட காலத்தில் இருந்தோம். மீளவும் இந்த நீர்க் கண்காட்சி சூழலைப் பார்க்கும் போது அதனை மீளவும் நினைவுபடுத்த வேண்டும் போல் இருந்தமை மிகவும் சிறப்பான விடயம். அதில் எனது பாடசாலை மாணவர்களும் பங்குபற்றி இருக்கிறார்கள் என்பதில் மகிழ்வடைகிறேன். 


நீர் தொடர்பாக எனது பட்ட மேற்படிப்புகளில் உவர்நீர்த்தடுப்பணையை அமைப்பதால் எவ்வாறு நன்னீரை சேமிக்க கூடியதாக இருக்கும் என்பது தொடர்பில் ஆய்வு செய்திருக்கிறேன். அதன் நோக்கம் கடலில் வீணாக சென்று சேரும் மழை நீரை சேமித்தலாகும். நீங்கள் இங்கிருந்து நயினாதீவு, ஊர்காவற்றுறை செல்லும் போது தையில் இருந்து வைகாசி வரைக்கும் அந்த இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதை அவதானிக்கலாம்.  அங்கிருந்த கிணறுகளில் உள்ள தண்ணீரை தொடர்ச்சியாக எடுத்துச் சென்று விஞ்ஞான பீட ஆய்வு கூடத்தில் ஆய்வு செய்த போது அந்தக் காலப்பகுதிகளில் கிணறுகளில் உள்ள உவர்த் தன்மை குறைவாக இருப்பதை அவதானித்திருக்கிறேன். இன்னும் மேலதிகமாக மழை நீரை சேமிக்க உவர்நீர் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கலாமா? அல்லது ஆழத்தை கூட்டலாமா எனச்   சிலர் கேட்பார்கள். இரண்டுமே செய்ய முடியாதிருக்கும். ஏனெனில் உவர்நீர் தடுப்பணையின் உயரத்தை கூட்டினால் நிலப்பகுதி வெள்ளக் காடாகிவிடும். ஏனெனில் நாங்கள் பல தாழ் நிலங்களில் வீடுகளை கட்டியிருக்கிறோம், வீட்டு முற்றங்களிலும் கல் பதித்து தண்ணீர் உட்புகா வண்ணம் நிலத்தை முழுவதுமாக மூடி வருகிறோம்.  ஆழத்தைக் கூட்டுவோமாக இருந்தால் உவர் நீர் உள்ளே வந்துவிடும். 

இந்த கண்காட்சியில் மாணவர்களை ஈடுபடுத்தியமை சிறப்பான அம்சமாகும். ஏனெனில் அவர்கள் தான் இந்த விழிப்புணர்வை சமூகத்திடம் கொண்டு போய் சேர்க்கப் போகிறார்கள். கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளில் அதியுயர் பெறுபேறுகளை பெறும் அனேகமான மாணவர்கள் சமூகமயப்படுத்தப்படாத மாணவர்களாக இருப்பதால் அவர்களால் எமது சமூகத்துக்கு பிரயோசனமில்லை. சிறந்த பெறுபேறுகளையும் பெறும் சமூக சிந்தனையுள்ள மாணவர்களால் தான் பாடசாலையின், சமூகத்தின் ஒட்டுமொத்த வெற்றி தங்கியுள்ளது. இந்தக் கருத்தினை யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் தலைவரான  ராஜேந்திரன் சுரேந்திரகுமாரன் அவர்களும் வலியுறுத்தி இருந்தமை மகிழ்ச்சியளிக்கிறது என்று தனது உரையில் குறிப்பிட்டார். 

--------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லூர் நீர்க்கண்காட்சியில் மீண்டும் மேடையேறும் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் தண்ணீரின் கதை நாடக ஆற்றுகை


நல்லூர் நீர்வளக் கண்காட்சி கடந்த ஒரு வாரமாக நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் இடம்பெற்று வருகிறது. தொடர்ந்து 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை குறித்த கண்காட்சி இடம்பெறவுள்ளது.

பலரது  வேண்டுகோளுக்கிணங்க செம்முகம் ஆற்றுகைக் குழுவின்  தண்ணீரின் கதை நாடக ஆற்றுகை ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில்  இன்று சனிக்கிழமை 23.08.2025 மாலை சரியாக 6 மணிக்கு மீண்டும் மேடையேறுகிறது. 

(கடந்த திங்கள் அரங்கேறிய தண்ணீரின் கதை நாடகத்தின் சில காட்சிகள் காணொளியில்)

எதிர்காலத்தில் தண்ணீர் இல்லாமல் போனால் எம் நிலை என்னவாகும் என்பதை தத்ரூபமாக சித்தரித்த குறித்த நாடகம் கடந்த திங்கட்கிழமை ஊருணி அரங்கில் மேடையேறி பலரது உற்சாக வரவேற்பையும் பாராட்டையும் பெற்றிருந்தது. மீண்டும்  இன்று சனிக்கிழமை அதே ஊருணி அரங்கில் குறித்த நாடகம் மேடையேறுகின்றது.

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

--------------------------------------------------------------------------------------------------------------------------------


 நல்லூர் நீர் கண்காட்சியின் ஊருணி அரங்கில் காத்தான் கூத்து பாடல்களும் - யாழ்ப்பாணத்து வெட்டைகள் உரையாடலும்  


நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் வரும் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. 

குறித்த கண்காட்சியின் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் இன்று ஊருணி அரங்கில் இன்று வெள்ளிக்கிழமை 22.08.2025 மாலை 6.30 மணிக்கு ந. தவசோதிநாதன், ந. நவநீசன், செ. உதயகுமாரன், நா. கிருபாகரன் ஆகிய கலைஞர்களின் ஆற்றுகையில் இடம்பெறும் காத்தான் கூத்து பாடல்களை தொடர்ந்து அரசியல் சமூக ஆய்வாளர் நிலாந்தன் அவர்கள் நீர் வளமும் பொது நிலங்களும் என்ற தலைப்பின் கீழ் யாழ்ப்பாணத்து வெட்டைகள் எனும் தொனிப்பொருளிலான கருத்துரையை தொடர்ந்து உரையாடலும் இடம்பெறும். 

அரங்க செயற்பாட்டு குழுவின் பாடலும் பறைதலும் நிகழ்வால் எழுச்சி கொள்ளப் போகும் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம் 

----------------------------------------------------------------------------------------------------------------------------------

அரங்க செயற்பாட்டு குழுவின் பாடலும் பறைதலும் நிகழ்வால் எழுச்சி கொள்ளப் போகும் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களம் 

நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில்  WASPAR & Young Water Professionals இன் ஏற்பாட்டில் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் வரும் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. 


குறித்த கண்காட்சியின் ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு அரங்க செயற்பாட்டு குழுவின் பாடலும் பறைதலும் அரங்க நிகழ்வும்,

 அதனைத் தொடர்ந்து "எமது நீரே எம்மைக் காக்கும்" எனும் தொனிப்பொருளில் எந்திரி சர்வா சர்வராஜா அவர்களின் கருத்துரையும் அதனைத் தொடர்ந்து உரையாடலும், 

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நிகழ்வாக ஏழிசை மிருதங்க நர்த்தனாலய மாணவி செல்வி ஜதுர்ஷியா ஜீவானந்தன் அவர்களின் நடன நிகழ்வும் இடம்பெறும். 

-------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லூர் நீர்க் கண்காட்சியை கற்றல் களமாக மாற்றிய வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் கற்கைநெறி மாணவர்கள் 

நல்லூர் முருகன் ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி எனும் தொனிப்பொருளில்  WASPAR & Young Water Professionals இன் ஏற்பாட்டில் பல்வேறு அரசு, தனியார் அமைப்புகளின் கூட்டு முயற்சியில் நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் வரும் 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை நீர்வளக் கண்காட்சி இடம்பெற்று வருகிறது. 

20.08.2025 புதன்கிழமை காலை 10.00 மணியளவில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையின் மாணவிகள் 75 பேர் தங்கள் விஞ்ஞான ஆசிரியர்களுடன் வருகை தந்து கண்காட்சி அரங்கை ஆர்வமுடன் பார்வையிட்டனர்.   

ஊருணி அரங்கில் நேற்று  20.08.2025 புதன்கிழமை மதியம் வவுனியா பல்கலைக்கழகத்தின் சூழலியல் கற்கைநெறியின் இறுதியாண்டு மாணவர்களுக்காக இடம்பெற்ற சிறப்பு காட்சிப்படுத்தல் மற்றும்  இயற்கை பற்றிய தொடர்பாடல் சார்ந்த கற்கைநெறியின் போது குறித்த கண்காட்சியை காண வந்திருந்த பன்னாட்டு நீர்வள ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வாளர்களுடன் வவுனியா பல்கலையின் மாணவர்களின் அறிமுக நிகழ்வு இடம்பெற்றது. 


கொழும்பை மையமாகக் கொண்டு இயங்குகின்ற சர்வதேச நீர் முகாமைத்துவத்துக்கான ஆய்வு நிறுவனம் சார்பில் டிமுத்து மலால்கொட, மகேஷ் ஜம்பானி, வடமாகாணத்தின் ஓய்வுநிலை நீர்ப்பாசன பணிப்பாளர் எந்திரி சண்முகானந்தன், இந்த செயற்திட்டத்தோடு நீண்டகால தொடர்பில் இருக்கின்ற யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீர் பற்றிய ஆய்வை நிகழ்த்திய அறிஞர் ஜே புந்தகே அவர்களும் வருகை தந்திருந்தார்கள். 

அவர்கள் நீர்க் கண்காட்சியை ஆர்வமுடன் பார்வையிட்டதோடு அதில் ஆய்வின் மூலம் வெளிப்படுத்தியுள்ள விடயங்களின் பெறுமதியை புரிந்தவர்களாக பாராட்டுக்களை வழங்கி அவர்கள் விடைபெற்றார்கள். 


இலங்கையின் பல்வேறு பாகங்களில் இருந்தும் வவுனியா பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவர்கள் யாழ்ப்பாண நிலத்தடி நீரின் தனித்துவம் மற்றும் இன்று அது ஏதிர்நோக்கியுள்ள ஆபத்து நிலைமைகளை உணர்ந்தவர்களாகவும், தமிழர்களின் பாரம்பரிய நீர் சார்ந்த விடயங்களை கற்றுக் கொண்டவர்களாகவும் கண்காட்சி அரங்கை விட்டு வெளியேறினர்.  


-----------------------------------------------------------------------------------------------------------------------


நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளில் பரதநாட்டிய ஆற்றுகையும், "யாழ்ப்பாணத்துக் குளங்கள்" கருத்துப் பகிர்வும் 

 வடக்கு நீர்வள உரையாடல் வட்டத்தினரால் முன்னெடுக்கப்படும் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. 

வவுனியா பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் தொடர்பியல் (Environmental Communication) மாணவர்கள் 30 பேர் தங்கள் விரிவுரையாளர்களுடன் நல்லூரில் இடம்பெறும் நீர்வளக் கண்காட்சியை இன்று புதன்கிழமை மதியம் பார்வையிடுகிறார்கள். 

அந்த மாணவர்களுக்கு இரண்டாவது ஆண்டாக விரிவுரைகளை நிகழ்த்தி வரும் பேராசிரியர் சிறீஸ்கந்தராஜா அவர்கள் குறித்த கண்காட்சியை ஒரு சூழல் தொடர்பாடல் அனுபவமாக கொண்டு அதனை பார்வையிடுவதும் மதிப்பிடுவதும் தொடர்பில் நல்லூர் நீர்க்கண்காட்சிக்களம் அம்மாணவர்களுக்கான புதிய வகுப்பின் ஆரம்பமாகவும்  இருக்கும். 

 நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 




 நீர்வளக் கண்காட்சியின் ஊருணி அரங்கில் ஐந்தாம் நாளான இன்று புதன்கிழமை 20.08.2025 மாலை 6.30 மணிக்கு சித்தாகாஸ் நடன நிறுவனத்தின் இயக்குனரான இராசையா தனராஜின் பரதநாட்டிய ஆற்றுகையும், தொடர்ந்து கட்டிடக் கலைஞரும், எழுத்தாளருமான இரத்தினவேலுப்பிள்ளை மயூரநாதன் அவர்களால் யாழ்ப்பாணத்துக் குளங்கள் என்கிற தலைப்பிலான கருத்துரையும், கலந்துரையாடலும் இடம்பெறும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாள் - பாடல் ஆற்றுகையும், நல்லூர் நீர்வளக் கண்காட்சி - கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள் கருத்துரையும்

 

நல்லூர் முருகன் ஆலய திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி தொடர்ந்து 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறவுள்ளது. 

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும், கலந்துரையாடல்களும்  தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    

அந்த வகையில் நீர்வளக் கண்காட்சியின் ஐந்தாம் நாளில் 19.08.2025 செவ்வாய்க்கிழமை ஆற்றுகை நிகழ்வாக அருள் விக்கினேஸ்வரனின் இயற்கையைப் பாடுவோம் இசை ஆற்றுகையும், "கேணி: நீர் மரபுரிமைக் கட்டுமானங்களைக் காக்க வேண்டிச் சில முன்வைப்புகள்" என்கிற தலைப்பில் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்களின் கருத்துரையும்  உரையாடலும் இடம்பெறும். 

நிலத்தடி நீரும் எமது பிரதேச நிலக்கட்டமைப்பு மற்றும் வழுக்கையாறு திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகளில் பங்கேற்கும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் நிலத்தடி நீரை பக்குவமாக பாதுகாக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விழிப்புணர்வு நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

நல்லூர் கந்தனைக் காணவரும் பக்தர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்று எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாக்க கரம் கோர்த்துப் பயணிக்க அழைக்கிறார்கள் வடக்கின் நீர்வளப் பாதுகாவலர்கள்.

------------------------------------------------------------------------------------------------------------------------------

நீர்வளக் கண்காட்சியின் நான்காம் நாள் -  "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகை 


இன்று 18.08.2025 திங்கட்கிழமை மாலை-06 மணி முதல் செம்முகம் ஆற்றுகைக் குழுவின் "தண்ணீரின் கதை" நாடக ஆற்றுகையும் அதனைத் தொடர்ந்து உரையாடலும் இடம்பெறும். 


அடுத்த நிகழ்வாக பொதுமக்களின் பங்கேற்புடனான வடக்கின் நீர்வள உரையாடல் வட்டத்தினரின் (Northern Water Dialog Forum)  சிறப்பு நிகழ்வும் இடம்பெறும். 

-----------------------------------------------------------------------------------------------------------------------------
நல்லூரில் மாபெரும் நீர்வளக் கண்காட்சியின் மூன்றாம் நாள் ஆற்றுகை நிகழ்வுகள்

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவை முன்னிட்டு 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது மாபெரும் நீர்வளக் கண்காட்சி வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகில் அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகி இன்று மூன்றாவது நாளாக இடம்பெற்று வருகிறது. 

நீர்வளக் கண்காட்சியின் ஒரு கட்டமாக ஊருணி ஆற்றுகைக் களத்தில் பல்வேறு ஆற்றுகை நிகழ்வுகளும் தினமும் மாலை வேளையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.    


இன்று 17.08.2025 மாலை-06 மணி முதல் இடம்பெறும் ஆற்றுகையின் முதல் நிகழ்வாக வன்னிப் பிராந்தியக் கோவலன் கூத்துப் பாடல்களை அண்ணாவியார் வேலாயுதம் ஸ்ரீஸ்கந்தராஜா, தம்பையா கணேசமணி, கணபதிப்பிள்ளை அருந்தாகரன்ஆகியோர் இணைந்து வழங்கவுள்ளனர்.          

மக்கள் பங்கேற்பு முறையில் நீர் முகாமைத்துவம், நீர் ஆளுகை செய்வது பற்றிய பரீட்சார்த்த முயற்சியின் ஒரு உதாரணமாக காரைநகர் ஜே-48 சிவகாமி அம்மன் கோவிலடி, விக்காவில், வெடியரசன் வீதி- குறிச்சிகளைச் சார்ந்த நீர்ப்பாவனையாளர் வட்டத்தினர் கலந்து கொள்கிறார்கள்.

பெண்களை மட்டுமே கொண்ட இச் சமூக செயலாற்றுகைக்கான வட்டம் கடந்த சில மாதங்களாகத் தம்மைத் தாமே ஒழுங்கு செய்து கொண்டு வந்திருக்கின்ற முறைமை பற்றியும், தமது குறிச்சியில் நிலவும் நீண்டகாலக் குடிநீர்ச் சிக்கல் மற்றும் அதன் பரிணாமங்களைக் கையாள்வது தொடர்பில் அவையினருடன் இணைந்து கலந்துரையாடுவர்.


-----------------------------------------------------------------------------------------------------------------------
நல்லூர் நீர் கண்காட்சியில் இன்று "இயற்கையைப் பாடுவோம்" இசை நிகழ்ச்சியும், யாழ்ப்பாணத்தில் நீர் நெருக்கடியா? யார் சொன்னார்கள்? இளையோரின் உரையாடல் களமும்

 

யாழ்ப்பாணம் - நல்லூர் நீர்வள கண்காட்சியில் "ஊருணி" எனப் பெயரிடப்பட்ட ஆற்றுகைக்களம்  அதன் தொடக்க நாளான 16.08.2025 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், ஆய்வாளருமான அகிலன் பாக்கியநாதன் அவர்கள் தலைமையில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. 

முதல்நாளான நேற்று பாரம்பரிய கலை வடிவமான அம்பா பாடல் ஆற்றுகையை பாசையூரின் மூத்த அண்ணாவியார் கொலின்ஸ் மற்றும் அவரது அணியினரும் நிகழ்த்தியிருந்தனர். 

நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சமீபமாக அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் தொடரும் ஒன்பது நாள் கண்காட்சியின் போது ஊருணி களத்தில் தினமும் மாலை 6.00 மணி முதல் 7.30 மணி வரை பல்வேறு நிகழ்வுகளும் இடம்பெற உள்ளன. 


இன்று சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் நாடக அரங்கியல்துறை விரிவுரையாளர்களான கேதீஸ்வரன் மற்றும் ஜஸ்டின் ஜெலூட்  குழுவினர் "இயற்கையைப் பாடுவோம்" எனும் தொனிப்பொருளில் கதை சொல்லும் அரங்க முறைமையை பின்பற்றி உருவாக்கப்பட்ட நிகழ்வினை  வழங்க இருக்கிறார்கள்.  

அதைத் தொடர்ந்து "யாழ்ப்பாணத்தில் நீர் நெருக்கடியா? யார் சொன்னார்கள்?" என்ற தலைப்பில் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் (Young Water Professionals) நிகழ்த்தும் உரையாடல் களம் இடம்பெறவுள்ளது. 

இனிவரும் நாள்களுக்கான நிகழ்ச்சி விபரங்கள் தொடர்ச்சியாக பகிரப்படும் என்பதனை ஏற்பாட்டாளர்கள் அறியத் தந்துள்ளார்கள்.  

-------------------------------------------------------------------------------------------------------------------------- 

"நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி" என்னும் தொனிப்பொருளிலான கண்காட்சியை தொடங்கி வைத்த ஆளுநர் 

நல்லூர்க் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா காலத்தில் 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' என்னும் தொனிப்பொருளில், நல்லூர் பாரதியார் சிலைக்கு அண்மையாகவுள்ள நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை மாலை (15.08.2025) வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் WASPAR செயற்திட்ட அணியினர்,  வடமாகாண நீர்வளத்துறை அதிகாரிகள், நீர்வள ஆர்வலர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். 


நாளை சனிக்கிழமையிலிருந்து கண்காட்சி நிறைவு நாளான 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை வரையில் காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரையில் கண்காட்சியை மக்கள் பார்வையிட முடியும்.


-----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நல்லூரில் பத்து நாள் நீர்க் கண்காட்சி இன்று ஆரம்பம்                


நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பெருந் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுத் துறைகளின் கூட்டு முயற்சியாக வடமாகாண நீர்வளம் பேணுதற்கான பேராய்வுச் செயற்திட்டத்தின் இரண்டாவது மாபெரும் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை (15.08.2025) மாலை-04 மணிக்கு நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்திற்குச் சமீபமாக அமைந்துள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் ஆரம்பமாகவுள்ளது.  

கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், உயர் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன்று தொடக்கம் எதிர்வரும்-24 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வரை இடம்பெறும் கண்காட்சியில் பல்வேறு ஆய்வுப் பெறுபேறுகள் உள்ளடங்கிய சீரமைக்கப்பட்ட காட்சிப் பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. இன்று இரவு-09 மணி வரையும், நாளை சனிக்கிழமை முதல் கண்காட்சி நிறைவுநாள் வரையான ஒன்பது நாட்களும் தினமும் காலை-09 மணி தொடக்கம் இரவு-09 மணி வரை மக்கள் கண்காட்சியைப் பார்வையிட முடியும். கண்காட்சியின் ஒரு கட்டமாகச் செயலமர்வுகளும், கலை ஆற்றுகைகளும் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------

நிலத்தடி நீரை பாதுகாப்போம்! நல்லூர் நீர் கண்காட்சியில் பங்கேற்போம்: விழிப்புணர்வை பெறுவோம் 

யாழ்ப்பாணம் - நல்லூர் முருகனின் பெருந்திருவிழாவுக்கு வருவோருக்கு வடக்கின் நிலத்தடி நீர் சார்ந்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்த WASPAR & Young Water Professionals முயற்சியில் நீர்வள சபை, நீர்ப்பாசண திணைக்களம், நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை, யாழ் மாநகர சபை, யாழ்ப்பாண பல்கலைக்கழகம், யாழ் இந்துக்கல்லூரி மற்றும் பல தன்னார்வலர் அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்தக் கண்காட்சி ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. 

எங்களின் பிரதேச நிலக்கட்டமைப்பு, வழுக்கியாறு, திட்ட மாதிரிகளின் கண்காட்சிகள், விஞ்ஞான விளக்கங்கள், ஆய்வு முடிவுகள், விளையாட்டுகள், புதிர்ப்போட்டிகள் மற்றும் சிறார்களுக்கான ஏராளமான பரிசுப் பொருட்களுடன் எங்கள் உயிர்நாடியான எங்கள் நிலத்தடி நீர்வளத்தை பாதுகாக்க ஒரு விழிப்புணர்வூட்டும் நடவடிக்கை இக்கண்காட்சி ஊடாக மேற்கொள்ளப்பட உள்ளது. 

நல்லூர் கந்தனைக் காணவரும் பக்தர்கள் எங்களின் இந்த கூட்டுமுயற்சியிலும் கலந்து கொண்டு நிலத்தடி நீர், வடக்கு மாகாணத்தின் நீர் உத்தரவாதம் சார்ந்த விடயங்களை அறிந்து எங்களது இன்றைய தலைமுறையினதும் எதிர்கால சந்ததியினதும் வாழ்வியலை நிலைபேறாக பாதுகாக்க கரம் கோர்த்துப் பயணிக்க அழைக்கிறார்கள் வடக்கின் நீர்வள பாதுகாவலர்கள். 

📍இடம்: “நெசவு கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில்” (நல்லூர் அரசடி வீதி, பாரதியார் சிலை அருகில்) 

🗓️காலம்: 15.08.2024- 24.08.2024( தினந்தோறும்)

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காது தொடர நிலத்தடி நீரை பாதுகாப்போம்!

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


நல்லூர் நீர்க்கண்காட்சியை முன்னிட்டு சிறகுகள் அமையம் நடாத்தும் மாணாக்கர்களுக்கான ஓவியப்போட்டி