நலம் தரும் வேம்பு நூல் வெளியீடு 02.02.2026 திங்கட்கிழமை காலை 10 மணிக்கு சுன்னாகம் பொதுநூலகத்தில் இடம்பெற்றது.
சமூக செயற்பாட்டாளரான சுந்தரமூர்த்தி புவனகுமார் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வை இயற்கை ஆர்வலரான அருணாசலம் விஜயகிருஷ்ணன் தொகுத்து வழங்கினார்.
கோப்பாய் சுப்பிரமணிய கோட்ட முதல்வரான ரிஷி தொண்டுநாத சுவாமிகள் அவர்களின் ஆசியுரையினைத் தொடர்ந்து அறிமுக உரையினை ஓய்வுநிலை ஆங்கில மொழிக் கற்பித்தல் பேராசிரியர் ம. சரவணபவஐயர் நிகழ்த்தினார்.
நூல் மதிப்பீட்டுரையினை எழுத்தாளரும், இயற்கை ஆர்வலருமான வடகோவை வரதராஜன் நிகழ்த்தியதோடு குறித்த நூலை தொகுத்த சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்கள் ஏற்புரையினை வழங்கினார்.
குறித்த நிகழ்விடத்தை சுன்னாகம் பொது நூலகத்தின் பிரதம நூலகரான சுதர்சன் ஜெயலக்ஸ்மி அவர்கள் சிறப்பாக ஒழுங்கமைத்து இருந்தார்.
தமிழர் பண்பாட்டுடன் இறுக்கமாகப் பின்னிப் பிணைந்த வேம்பின் நோயூக்கித் தன்மையைக் குறைக்கும் அற்புத தொழிற்பாடுகள் தொடர்பில் பேச்சாளர்கள் விபரித்திருந்தனர்.
வேப்பெண்ணையில் இருந்து வேப்பமிலைத்தூள் வரை உலகளாவிய ரீதியில் வேம்பின் பல்வேறு உற்பத்திப் பொருள்கள் எவ்வாறு சந்தையில் உள்ளன என்பது தொடர்பிலும் நிகழ்வின் ஏற்பாட்டாளரான சுந்தரமூர்த்தி புவனகுமார் அவர்கள் விளக்கமளித்திருந்தார்.
குறித்த நிகழ்வில் எழுத்தாளர்கள், ஆர்வலர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










