நிறைவு நாளான இன்று ஊருணி அரங்கில் பாடல் ஆற்றுகையும், மீண்டும் அரங்கேறும் செம்முகம் குழுவினரின் நீர் தான்... நீரே தான்... நாடக ஆற்றுகையும்

  


கடந்த ஒன்பது நாட்களாக இளையோர்கள், பெரியோர்கள் என பலரும் பார்வையிட்டு நீர் சார்ந்த அறிவையும், நீருக்கான எதிர்கால அச்சுறுத்தல் அபாயங்களுக்கான விழிப்புணர்வையும், அது சார்ந்த விளக்கங்களையும் பெற்று வரும் நல்லூர் நீர்வளக் கண்காட்சியின் இறுதி நாளான இன்று 11.09.2026 வெள்ளிக்கிழமை காலை முதல் மதியம் வரை சில பாடசாலைகளை சேர்ந்த மாணவர்கள் கண்காட்சி பார்வையிடலுக்காக வருகை தருகின்றனர். சிறார்களை கவரும் துலாக் கிணறு மாதிரி, மாணவர்களுக்கான நீர் சார்ந்த பொது அறிவுப் போட்டிகள், பொதுமக்களின் ஈடுபாட்டுடன் புனரமைக்கப்படும் ஏழாலை பெரியதம்பிரான் குள மாதிரி, சாதாரண கிணறு, குழாய்க்கிணறு இடையிலான வேறுபாடுகள் அதன்மூலம் நிலத்தடி நீர் உவர்நீராகும் ஆபத்து குறித்த விழிப்புணர்வுகள், எமது பிரதேசத்தில் உயர்மாடிக் குடியிருப்புகளின் ஆபத்துகள், வழுக்கையாறு பயணிக்கும் பிரதேசங்களின் முப்பரிமாண வரைபட விளக்கங்கள், பார்வைக்கு வைக்கப்பட்டுள்ள நீர்சார்ந்த பத்திரிகை, சஞ்சிகை, புத்தக வெளியீடுகள், நீர் மாசடைதல் மற்றும் பாவனைக்கு கிடைக்கும் நீரின் அளவு குறைந்துள்ளமை போன்ற பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ள குறித்த கண்காட்சியின் இறுதிநாள் இன்று வெள்ளிக்கிழமை ஆகையால் இதுவரை கண்காட்சியை பார்வையிடாதவர்கள் பார்வையிடுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

அதனைத் தொடர்ந்து மாலை 7 மணிக்கு ஊருணி பாரம்பரிய ஆற்றுகைக் களத்தில் வல்லமை அமைப்பினரின் பாடல் ஆற்றுகையும், மீண்டும் அரங்கேறும் செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "நீர் தான்... நீரே தான்..." நாடக ஆற்றுகை கண்காட்சியின் தொடக்க நாளன்று ஆற்றுகை செய்யப்பட்டு பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் "நீர் தான்... நீரே தான்... நாடக ஆற்றுகை" மீளவும் இன்று இடம்பெறுகிறது. எமது பிரதேசத்தில் சிறு சிறு காணித்துண்டுகளை பிரித்து புதிதாக குழாய்க் கிணறுகள் அமைப்பது அதிகரித்துள்ள நிலையில் அதன் ஆபத்துகளையும் மற்றும் நீர் சார்ந்த பல்வேறு விடயங்களையும் விபரிக்கும் நாடக ஆற்றுகையாக இது அமைந்துள்ளது. குறித்த நாடக ஆற்றுகையை பார்வையிட தவறியவர்கள் மீண்டும் இன்று நல்லூர் பாரதியார் சிலைக்கு அருகிலுள்ள நெசவுக் கைத்தொழிற் பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள யாழ்ப்பாண நீர் கண்காட்சியில் பார்வையிட முடியும். இறுதிநாளான இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நீர்வளம் பேணுதலுக்கான பேராய்வுச் செயற்றிட்டம் மற்றும் வடக்கின் இளம் நீர்வாண்மையாளர் வட்டம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் 'நிலத்தடி நீர் எங்கள் உயிர்நாடி' எனும் தொனிப்பொருளிலான மேற்படி நிலத்தடி நீர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கண்காட்சியை ஒழுங்கமைப்பதில் உதவிய மாணவர்களுக்கும், தன்னார்வலர்களுக்குமான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் தொடர்ந்தும் போட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ்கள், பரிசுகள் வழங்கும் நிகழ்வுடன் அனைத்தும் நிறைவுபெறும்.