பத்தரமுல்லையில் அமைந்துள்ள இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகத்துக்கும் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு நிலையத்துக்குமிடையே உள்ள தொடர்பாடல் மற்றும் தொழிநுட்பக் குறைபாட்டால் புலம்பெயர் தமிழர் ஒருவர் இறுதிநேரத்தில் விமான நிலையத்தில் அவதிப்பட நேர்ந்ததுடன் காலாவதியான விசாவுக்குரிய தண்டப்பணத்தை செலுத்த நேரிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது,
பிரித்தானியாவில் வசிக்கும் புலம்பெயர் தமிழர் ஒருவர் சுற்றுலா விசாவில் இவ்வருட ஆரம்பத்தில் இலங்கை வந்துள்ளார். விசா முடிவடைய முன் அவர் புறப்பட ஆயத்தமான போதும், கடந்த இருவாரங்களுக்கு முன் ஈரான் - இஸ்ரேல் இடையிலான யுத்தம் ஆரம்பித்த நிலையில் விமானப் பயணம் மேலும் தாமதமாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் யாழ்ப்பாணத்திலிருந்து இணையவழி மூலம் விசா புதுப்பித்தலுக்கு விண்ணப்பித்த போதும் விசா புதுப்பித்தல் கட்டணம் செலுத்துவதற்கான இணைப்பு (Payment Link) வந்து சேரவில்லை. இதனையடுத்து அவர் நேரடியாகவே பத்தரமுல்லை சுகுருபாயவில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்துக்கு சென்ற போது, அவர் ஏற்கனவே விண்ணப்பித்திருந்த இரட்டைக் குடியுரிமைக்கான விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும் அதற்கான கட்டணமான 2000 அமெரிக்க டொலர்களை செலுத்துமாறு கோரப்பட்டிருந்தது.
இந்நிலையில் குறித்த பணத்தை அவர் கட்டிய பின்னர் இரட்டைக் குடியுரிமைக்கான உறுதிப்படுத்தல் கடிதத்தினை confirmation letter இனை வழங்கிய அதிகாரிகள் உங்கள் இரட்டைக் குடியுரிமைக்கான கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளதால் இனி உங்களுக்கு விசா புதுப்பிக்க வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அவர் தனது விமானப்பயண திகதியை மாற்றியமைத்து கட்டுநாயக்கா - பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை 17.03.2026 சென்ற போது, அவர் தனது பழைய விசா மற்றும் இரட்டைக் குடியுரிமைக்கான உறுதிப்படுத்தல் கடிதத்தினையும் அங்கிருந்த குடியகல்வு அதிகாரிகளிடம் காட்டிய போது அவர்கள் விசா காலம் முடிவடைந்தும் இரண்டு வாரங்கள் மேலதிகமாக இலங்கையில் தங்கியிருந்தமைக்கான தண்டப்பணத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அவர் ஏற்கனவே நடந்த விடயங்களை விளக்கி கூறிய போதும் அங்கிருந்த அதிகாரிகள் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. சுற்றுலா விசாவில் நாட்டுக்குள் வந்தால் அதே விசாவில் தான் வெளியேற வேண்டும் எனவும், உங்களது இரட்டைக் குடியுரிமை ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம் இன்னும் தங்களது கணனி தரவில் வந்து சேரவில்லை (Update ஆகவில்லை) எனவும், விசா காலாவதியான பின்பும் தங்கியிருந்தமைக்கான கட்டணமாக 600 அமெரிக்க டொலர்களை செலுத்துமாறும் தெரிவித்துள்ளனர். இல்லாவிடில் தங்களிடம் 300 டொலர்களை தந்துவிட்டு போகுமாறு தெரிவித்த நிலையில், அவர் 600 டொலர்களை உத்தியோகபூர்வமாக செலுத்தி அதற்கான பற்றுச் சீட்டையும் பெற்றுக் கொண்டு பயணத்தை தொடர்ந்துள்ளார்.
அரச தரப்பு என்னதான் ஊழலை ஒழிப்போம் எனக் கூறினாலும் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை எனவும், இலங்கைக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும் விமான நிலையத்திலேயே ஊழல் தொடர்வதாகவும், பத்தரமுல்லை சுகுருபாயாவில் அமைந்துள்ள இலங்கையின் குடிவரவு மற்றும் குடியகல்வு தலைமை அலுவலகத்தின் வாடிக்கையாளர் சேவையில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசிகள் எப்போதும் வேலை செய்வதில்லை எனவும், விசா நீடிப்பு தொடர்பிலான இணைய இணைப்பில் விண்ணப்பித்தாலும் அதற்குரிய கட்டணம் செலுத்துவதற்குரிய இணைப்பு உரிய நேரத்தில் வருவதில்லை எனவும் தான் பயணித்த வேறு நாடுகளில் இவ்வாறான நிலை பெரும்பாலும் காணப்படுவதில்லை எனவும் குறித்த புலம்பெயர் தமிழர் கவலை தெரிவித்தார்.
சுற்றுலாத்துறைக்கு அதிக முக்கியவத்துவம் கொடுத்து அபிவிருத்தி செய்யும் இலங்கை அரசு இவ்வாறான குறைபாடுகளை இனியாவது நிவர்த்தி செய்யுமா?

