செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிட வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுவர் கார்மென் மொரேனோ தலைமையிலான உயர்மட்டப் பிரதிநிதிகளிடம் சர்வதேச விசாரணை கோரி வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் ஏற்பாட்டில் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டமொன்று நேற்றுப் புதன்கிழமை (22.07.2026) காலை-08.30 மணி முதல் முற்பகல்-10.15 மணி வரை யாழ். செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழிக்கு முன்பாக நடாத்தப்பட்டது.
இந்தக் கவனயீர்ப்புப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், சிவகுரு ஆதீன முதல்வர் தவத்திரு. வேலன் சுவாமிகள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன், வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், செம்மணி மனிதப் புதைகுழி வழக்காளி கிருபாகரன், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன், உரும்பிராய் உதவும் நண்பர்கள் அமைப்பின் தலைவர் ந. விஜயதரன், மக்கள் செயல் அமைப்பின் செயற்பாட்டாளர்கள், அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
கவனயீர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் இராணுவத்தால் கடத்திச் செல்லப்பட்ட எமது உறவுகள் எங்கே?, வெள்ளை வான்களில் கடத்திச் செல்லப்பட்ட எமது உறவுகள் எங்கே?, ஒட்டுக் குழுக்களால் கடத்திச் செல்லப்பட்ட எம் உறவுகள் எங்கே?, செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுக்குச் சர்வதேச மேற்பார்வை வேண்டும்!, வேண்டாம்....வேண்டாம்... உள்நாட்டு விசாரணை வேண்டாம்!, வேண்டும்...வேண்டும்...சர்வதேச நீதி விசாரணை வேண்டும்! உள்ளிட்ட பல சுலோகங்கள் எழுதப்பட்ட பதாதைகள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் புகைப்படங்களைத் தமது கைகளில் ஏந்தியும், பல்வேறு கோஷங்களை எழுப்பியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றமையால் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வயோதிபத் தாய்மார்கள் பலரும் சோர்வடைந்திருந்தமையை அவதானிக்க முடிந்தது. அத்துடன் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன ஆனது? என்று கேட்டு வயோதிபத் தாய்மார்கள் பலரும் கதறி அழுத காட்சி காண்பவர்கள் நெஞ்சங்களைக் கலங்க வைத்தது. போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுகளைப் பார்வையிட்ட பின்னர் வடக்கு- கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்த பின் செம்மணி சித்துபாத்தி மனிதப் புதைகுழி வளாகத்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவினர் வெளியேறினர்.மேற்படி குழுவினர் மனிதப் புதைகுழியைப் பார்வையிடச் சென்ற போதும், அங்கிருந்து வெளியேறிய போதும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் செம்மணி மனிதப் புதைகுழிக்குச் சர்வதேச நீதி கோரி உரத்த குரலில் பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.


.jpg)
.jpg)
.jpg)

.jpg)
.jpg)
