காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் போராட்டம்

அனைத்துலக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டுச் சிறிலங்கா அரச படைகளால் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதிகோரி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (30.08.2024) நண்பகல்-12 மணி முதல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட நுழைவாயிலில்  கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சார்பாக வயோதிபத் தாயாரொருவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் மா.இளம்பிறையன் மற்றும் பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவுகளுக்குத் தொடர்ந்து மறுக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தங்கள் வாய்களைக் கறுப்புத் துணிகளால் கட்டியிருந்தனர்.


இறுதிப் போரில் இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் எங்கே?, சிங்கள ஆட்சிகள் எத்தனை மாறியும் எங்கள் காட்சிகள் மாறவில்லையே?, எங்கள் கூட்டு மனவலுவை அலைக்கழிப்புக்களால் சிதைக்காதே!, ஒருபுறம் மறுக்கப்படும் நீதி! மறுபக்கம் நல்லிணக்கம்! , ஓலம் நிறைந்த தமிழர் வாழ்வுக்கு எப்போது விடிவு?  உள்ளிட்ட பல்வேறு சுலோகங்களைத் தமது  கைகளில் ஏந்தி எதிர்ப்பில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி காலம் தாழ்த்தப்படாது வழங்கப்பட வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். 

(செ.ரவிசாந்)