முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் வடக்கு- கிழக்குத் தமிழர் தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் இன்று திங்கட்கிழமை (18.05.2026) உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்படவுள்ளது.
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவு நாளின் பிரதான நிகழ்வு முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலை நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பின் ஏற்பாட்டில் முல்லைத்தீவு முள்ளிவாய்க்காலிலுள்ள தமிழினப் படுகொலை நினைவுத் தூபியடியில் இடம்பெறவுள்ளது.
இன்று முற்பகல்-10.15 மணியளவில் முள்ளிவாய்க்கால் கொள்கைப் பிரகடனம் வெளியீட்டுடன் ஆரம்பமாகும் நிகழ்வில் முற்பகல்- 10.29 மணியளவில் மணி ஒலிக்கப்பட்டு முற்பகல்-10.30 மணியளவில் அக வணக்கம் செலுத்தப்படும். முற்பகல்- 10.31 மணியளவில் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து முற்பகல்- 10.35 மணியளவில் மலர் அஞ்சலி இடம்பெறும்.
இதேவேளை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியடியில் இன்று பிற்பகல்-02.30 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வு இடம்பெறும். அத்துடன் தமிழ்த்தேசியக் கட்சிகள், சிவில்- சமூக அமைப்புக்களாலும் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் முள்ளிவாய்க்கால் நினைவுநாள் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

