2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்குப் பரீட்சகர்களை இணைத்துக் கொள்ளப் பரீட்சைத் திணைக்களம் மீண்டும் விண்ணப்பம் கோரியுள்ளது.
இன்று வியாழக்கிழமை(27.04.2023) முதல் எதிர்வரும் மே-02 ஆம் திகதி வரையான ஆறு நாட்களில் இதற்கான விண்ணப்பங்களை இணையத் தளம் வழியாகச் சமர்ப்பிக்க முடியும் எனப் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
பௌதீகவியல் (01), இரசாயனவியல் (02), கணிதம் (07), விவசாய விஞ்ஞானம் (08), உயிரியல் (09), இணைந்த கணிதம் (10), தொடர்பாடலும் ஊடகக் கற்கையும் (29), வணிகக்கல்வி (32), பொறியியற் தொழில்நுட்பவியல் (65), உயிர் முறைமைகள் தொழில்நுட்பவியல் (66), தொழில்நுட்பவியலுக்கான விஞ்ஞானம் (67) மற்றும் ஆங்கிலம் (73) ஆகிய பாடங்களுக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
விடைத்தாள் மதிப்பீட்டுக்கு முந்தைய காலக் கெடுவுக்குள் விண்ணப்பிக்காத ஆசிரியர்களும் இதற்கென விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரிகள் தமது பிள்ளை அல்லது குடும்ப உறுப்பினர்கள் பரீட்சைக்குத் தோற்றியிருப்பின் அவர்கள் தோற்றிய பாடம் அல்லாத ஏனைய பாடங்களுக்கான விடைத்தாள் மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
கடந்த- 31 ஆம் திகதிக்குப் பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விண்ணப்பிக்க விரும்பும் தகுதி பெற்றவர்கள் http://onlineexams.gov.lk/eic எனும் இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்குமாறும் பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர மேலும் குறிப்பிட்டுள்ளார்.