யாழ்ப்பாணம், வவுனியா, மலையகத்தில் புரட்சிகர மேதின நிகழ்வு


சர்வதேசத் தொழிலாளர்களின் போராட்டத் தினமான மேதினத்தை இம்முறை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி 'ஆட்சியின் அடக்குமுறைகளை எதிர்க்கும் புரட்சிகர மேதினம்' எனும் தொனிப் பொருளில் யாழ்ப்பாணம், மலையகம், வவுனியா ஆகிய இடங்களில் பேரணிகள், கூட்டங்களுடன் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது.

அந்த வகையில் யாழ்ப்பாணத்திற்கான புரட்சிகர மேதின நிகழ்வு நாளையதினம் முதலாம் திகதி திங்கட்கிழமை இடம்பெறும். நாளை மாலை-04 மணியளவில் பருத்தித்துறை வீதி, கல்வியங்காட்டுச் சந்தைக்கு அருகிலிருந்து மேதினப் பேரணி ஆரம்பமாகும்.

அதனைத் தொடர்ந்து மாலை-05 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் மேதினப் பொதுக்கூட்டம் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும். 

இந்தக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடமைவாதியுமான சி.கா.செந்திவேல், கட்சியின் தேசிய அமைப்பாளர் டேவிட் சுரேன், கட்சியின் தலைமைக் குழுவைச் சேர்ந்த சட்டத்தரணி சோ. தேவராஜா ஆகியோர் கலந்து கொண்டு பிரதான உரைகள் ஆற்றுவர்.                    

வன்னிப் பிராந்தியத்திற்கான புரட்சிகர மேதினம் வவுனியாவில் நடைபெறும். நாளை காலை-09 மணியளவில் வவுனியா மத்திய மகா வித்தியாலயத்திற்கு அருகிலிருந்து பேரணி ஆரம்பமாகி அதனைத் தொடர்ந்து நகரசபை மண்டபத்தில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் ம.பகீரதன் தலைமையில் மேதினப் பொதுக் கூட்டம்  நடைபெறும். பொதுக் கூட்டத்தில் கட்சியின் தேசிய அமைப்பாளர் டேவிட் சுரேன், கட்சியின் வவுனியா மாவட்டச் செயலாளர் நி.பிரதீபன் ஆகியோர் பிரதான உரைகள் ஆற்றுவர்.

மலையகத்திற்கான புரட்சிகர மேதினம்  இராகலை நகரில் இடம்பெறும். நாளை காலை-10 மணியளவில்  இராகலை நடுக்கணக்கு கடை வீதியிலிருந்து மேதினப் பேரணி ஆரம்பமாகி இராகலை நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்து தரிப்பிட நிலையத்தடியைச்   சென்றடைந்து அங்கு முற்பகல்-11 மணியளவில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் சிவ.இராஜேந்திரன் தலைமையில் மேதினப் பொதுக் கூட்டம் நடைபெறும். பொதுக் கூட்டத்தில் கட்சியின் மலையகப் பிராந்தியச் செயலாளர் டேவிட் சுரேன், கட்சியின் மலையகப் பிராந்தியக் குழு உறுப்பினர் ச.பன்னீர்ச்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு பிரதான உரைகள் நிகழ்த்துவர்.          

இதேவேளை, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! ஒடுக்கப்படும் தேசிய இனங்களே ஐக்கியப்படுங்கள்!! எனும் முழக்க கோஷத்துடன் முன்னெடுக்கப்படும் புரட்சிகர மேதினப் பேரணியிலும், பொதுக் கூட்டத்திலும் அனைத்துத் தரப்பினரையும் அணி திரளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.