யாழ்.தையிட்டியில் கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்துவதற்கு மல்லாகம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியாருடைய காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசியப் பேரவையால் முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்புப் போராட்டம் மீண்டும் பலரதும் பங்குபற்றுதலுடனும் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
நேற்றையதினம் தையிட்டிப் போராட்டக் களத்தில் ஒன்பது பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரனுடன் மாத்திரம் போராட்டம் இரவு பகலாகத் தொடர்ந்தும் நீடித்தது.
இந் நிலையில் மல்லாகம் நீதிமன்றத்தால் இன்றையதினம் பிணையில் விடுவிக்கப்பட்ட ஒன்பது பேரும் நேரடியாகப் போராட்டக் களத்திற்குச் சென்றதுடன் ஏனைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள், பொதுமக்களுடன் இணைந்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தற்போதும் போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில் நாளை வியாழக்கிழமையும் போராட்டம் தொடரும் எனப் போராட்ட ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இன்று மாலை வேளையில் சர்ச்சைக்குரிய தையிட்டி விகாரை அமைந்துள்ள பகுதியிலும் மற்றும் அதனை அண்டிய போராட்டம் இடம்பெறும் பகுதியிலும் பலாலி மற்றும் காங்கேசன்துறைப் பொலிஸார் ஏராளமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, போராட்டக் களத்திற்குச் செல்லும் பிரதான வழியாகக் காணப்படும் கலைவாணி முகப்பு வீதியில் இன்று மாலை-05 மணி முதல் போராட்டத்திற்குச் செல்வோரைத் தடுக்கும் வகையில் பொலிஸாரால் சட்டவிரோதமாகத் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளமை பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.