சுன்னாகம் கதிரமலைச் சிவன் முத்தேர் பவனி விமரிசை (Photos)

வரலாற்றுப் பிரசித்திபெற்ற யாழ்.சுன்னாகம் ஸ்ரீ கதிரமலைச் சிவன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்று முன்தினம் வியாழக்கிழமை(18.05.2023) வெகுசிறப்பாக இடம்பெற்றது.

காலை வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து சோமஸ்கந்தப் பெருமான், சொர்ணாம்பிகை சமேத பொன்னம்பலவாணேஸ்வரப் பெருமான், விநாயகப் பெருமான், முருகப்பெருமான், சண்டேஸ்வரப் பெருமான் ஆகிய தெய்வங்கள் சர்வ அலங்காரங்களுடன் உள்வீதியில் திருநடனத்துடன் அசைந்தாடி வலம் வந்தனர்.



காலை-09.30 மணியளவில் மேற்படி தெய்வங்கள் முத் தேர்களிலும் எழுந்தருளியதைத் தொடர்ந்து தேர் பவனிக்கான சிறப்புக் கிரியைகள் நடைபெற்றதைத் தொடர்ந்து சிதறு தேங்காய்கள் உடைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க காலை-10 மணியளவில் முத் தேர்களின் பவனி ஆரம்பமானது.            


பிரதான சித்திரத் தேரின் வடத்தை ஆண் அடியவர்களும், பெண் அடியவர்களும் இணைந்து தொட்டிழுத்தனர். முத் தேர்களும் முற்பகல்-11.45 மணியளவில் இருப்பிடம் வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

முத்தேர் பவனி இடம்பெற்ற போது ஆண் அடியவர்கள் பலரும் அங்கப் பிரதிஷ்டை செய்தும், பறவைக் காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் பலரும் அடியளித்தும், கற்பூரச் சட்டிகள் எடுத்தும் தமது நேர்த்திக் கடன்களை நேர்த்தியுடன் நிறைவேற்றினர்.    


தேர்த் திருவிழாவை முன்னிட்டு அடியார்களின் தாகம் தீர்ப்பதற்காக ஆலயச் சூழலில் பல தாகசாந்தி நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்ததுடன் ஆலய மணிமண்டபத்தில் அடியவர்களுக்கு அன்னதானமும் பரிமாறப்பட்டது.    


       

இதேவேளை, கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் இவ்வாலயத் தேர்த் திருவிழாவில் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டு வழிபாடாற்றியமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.     

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)