யாழ்.போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி சாரங்கன் நேற்று இயற்கை எய்தியுள்ளார்.
யாழ்.போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய வைத்தியர் வேலாயுதம் சாரங்கன் திடீர் சுகவீனமடைந்து அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
ஐந்து நாட்களாக தொடர் காய்ச்சல் இருந்த நிலையில் வீட்டில் நிலை தடுமாறி வீழ்ந்ததை தொடர்ந்து யாழ் போதனா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு கடந்த செவ்வாய்க்கிழமை முதல் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டிருந்த நிலையில் பின் உடலுறுப்புகள் படிப்படியாக செயலிழந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
எழுதுமட்டுவாழ் தெற்கை பிறந்த இடமாக கொண்ட வைத்தியர் சாரங்கன் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழைய மாணவரும், யாழ் இந்து பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினருமாவார். சமூக மட்டங்களில் பல்வேறு அமைப்புக்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார்.
அன்னாரின் இழப்பிற்கு வைத்தியசாலை சமூகம் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்வதாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
இவர் சமூக நோக்கத்தையும் இலக்காக கொண்டு பலாலி வீதி கோண்டாவில் சந்திக்கு அண்மையாக தாயகம் மருத்துவ நிலையத்தையும் நடத்தி பலருக்கும் சிகிச்சையளித்து வந்துள்ளார்.
தமிழ்த் தேசிய பற்றாளரும் மக்கள் நலனில் அதீத அக்கறை கொண்ட வைத்தியர் சாரங்கனுக்கு முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பலரும் நினைவுக் குறிப்புகளை எழுதி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.