புன்னாலைக்கட்டுவன் தெற்கில் பட்டப் பகலில் முதியவரிடம் வழிப்பறிக் கொள்ளை!



மோட்டார்ச் சைக்கிளொன்றில் வீதியால் சென்ற இனம்தெரியாத இரு நபர்கள் இடமொன்றிற்குச் செல்வதற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து முதியவரொருவரிடமிருந்து ஒருதொகைப் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.        

மேற்படி சம்பவம் புன்னாலைக்கட்டுவன் தெற்கில் ஆயாக்கடவை சித்திவிநாயகர் ஆலயத்திற்கும், புன்னாலைக்கட்டுவன் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில், பலாலி வீதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை(02.07.2023) பிற்பகல்-01 மணியளவில் நடந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

தேவை நிமிர்த்தம் வயாவிளானிலிருந்து திருநெல்வேலி நோக்கித் துவிச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த குறித்த முதியவரிடம் தங்கள் முகங்களை கறுப்புக் கண்ணாடியிலான முகக் கவசங்களால் மூடி மறைத்தவாறு பல்சர் ரக மோட்டார்ச் சைக்கிளொன்றில் இருவர் இப்படியே புன்னாலைக்கட்டுவன் வடக்குச் சந்திக்குச் செல்லலாமா? என வழி கேட்டுள்ளனர். அதற்கு குறித்த முதியவர் பதிலளித்துக் கொண்டிருந்த போதே அந்த நபர்கள் வேறு சில விடயங்கள் தொடர்பிலும் வினாவியுள்ளனர்.

இருவரினதும் செயற்பாடுகளால் சந்தேகமடைந்த குறித்த முதியவர் சுதாகரிப்பதற்கிடையில் அவரது மேல்சட்டையிலிருந்த ஒருதொகைப் பணத்தை மோட்டார்ச் சைக்கிளின் பின்னாலிருந்த நபர் முதியவரிடமிருந்து பறித்தெடுத்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த குறித்த முதியவர்  உரத்துக் குரலெழுப்பிய போதிலும் இரு நபர்களும் அங்கிருந்து வேகமாக மோட்டார்ச் சைக்கிளில் சென்று மறைந்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவனில் அமைந்துள்ள வாகனங்கள் பழுது பார்க்கும் நிலையமொன்றில் ஊழியராகப் பணி செய்யும் திருநெல்வேலியைச் சேர்ந்த 66 வயதான முதியவரிடமே இவ்வாறு வழிப்பறிக் கொள்ளை மேற்கொள்ளப்பட்டுள்ளது.    

தனது பணத்தைத் திருடிக் கொண்டு சென்றவர்கள் சுமார்-28 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்டவர்களெனவும், அவர்கள் வந்த மோட்டார்ச் சைக்கிளின் இலக்கத் தகடு மறைக்கப்பட்டிருந்ததாகவும் பணத்தைப் பறிகொடுத்த முதியவர் தெரிவித்தார்.

இதேவேளை, புன்னாலைக்கட்டுவன் தெற்குச் சந்திக்கும், புன்னாலைக்கட்டுவன் வடக்குச் சந்திக்கும் இடைப்பட்ட பகுதியில் பகல் வேளைகளில் அண்மைக் காலமாக வழிப்பறிக் கொள்ளை இடம்பெறுவதற்கான ஏதுநிலைகள் உருவாகியுள்ளதாகவும், இதனைத் தடுக்கச் சுன்னாகம் பொலிஸார் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொதுமக்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.