தையிட்டியில் மீண்டும் ஆரம்பமானது தொடர் கவனயீர்ப்புப் போராட்டம்வலிகாமம் வடக்கு தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றுமாறு கோரியும், அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டுமென வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை(02.07.2023) மாலை-03 மணியளவில் நான்காம் கட்டமாக மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே தனியார் காணியில் ஆரம்பமாகித் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


இன்றைய கவனயீர்ப்புப் போராட்டத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் மகளிர் அணித் தலைவி திருமதி.வாசுகி சுதாகரன், கிராமிய உழைப்பாளர் சங்கத் தலைவர் என்.இன்பம், கிராமிய உழைப்பாளர் சங்க உறுப்பினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

போராட்டம் நடைபெறப் போவதாக முன்கூட்டியே தகவலறிந்து போராட்டம் ஆரம்பமாவதற்கு முன்பிருந்தே தையிட்டி திஸ்ஸ விகாரையிலும், அதன் சுற்றாடலிலும் பலாலிப் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.      

         

இதேவேளை, இன்று மாலை ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் எசல முழுநோன்மதி தினமான நாளை திங்கட்கிழமை(03.07.2023) மாலை-05 மணி வரை தொடர்ந்தும்  முன்னெடுக்கப்படுமெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.அனைவரும் கலந்து கொண்டு போராட்டத்திற்கு வலுச் சேர்க்குமாறும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.