கிராமம் தோறும் அறநெறிப் பாடசாலைகளை இயக்க வேண்டியது ஆலயங்களின் கட்டாய பொறுப்பாகவிருக்கின்றது. இளைய சமூதாயத்தை வழிப்படுத்துவதற்காக ஆலய நிர்வாகங்கள் இந்தப் பொறுப்பை ஏற்றுச் செயற்படுத்த முன்வர வேண்டுமெனத் தெல்லிப்பழைப் பிரதேச செயலர் ச.சிவஸ்ரீ வலியுறுத்தியுள்ளார்.
தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி ஆலய முன்னாள் பெருந் தலைவர் சிவத்தமிழ்ச் செல்வி. கலாநிதி. தங்கம்மா அப்பாக்குட்டியின் பதினைந்தாவது ஆண்டு குருபூசை வைபவம் ஆனிமாத விசாக நன்னாளான நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(30.06.2023) காலை தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலய வளாகத்தில் அமைந்துள்ள அன்னபூரணி மண்டபத்தில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்.மாவட்டச் செயலர் யாழ்.மாவட்டத்தில் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தனியார் கல்வி நிலையங்களின் கல்வி நடவடிக்கைகளை நிறுத்தி மாணவர்களை அறநெறிக் கல்விச் செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதற்கான முயற்சிகளை முன்னெடுத்துள்ளார். எனினும், இந்த விடயத்தில் பலரும் முரண்பட்டுக் கொண்டிருப்பது மன வேதனையைத் தருகிறது. உண்மையில் தற்போதைய காலகட்டத்தில் மாணவர்களுக்கு அறநெறி போதித்து அவர்களை ஒழுக்கமுள்ளவர்களாக வளர்க்க வேண்டியது கட்டாய தேவையாகவுள்ளது.
எமது மாணவர்களின் அறநெறிக் கல்வி வளர்ச்சிக்காக உதவி செய்வதற்குப் பல புலம்பெயர்ந்த நல்லுள்ளங்கள் தயாராகவிருக்கின்றார்கள்.செஞ்சொற்செல்வர் ஆறு.திருமுருகன் யாழில் அறநெறிக் கல்வியை வலுப்படுத்துவதற்குப் பூரண ஒத்துழைப்பு வழங்குவதாக அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார்.
அறநெறிக் கல்வியின் வளர்ச்சிக்காக ஆலய நிர்வாகங்களை அழைத்து அவர்களுக்குப் போதிய விளக்கங்களை மேற்கொள்வதற்கு நாங்கள் முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம்.
இதற்கு மக்களனைவரும் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.
(செ.ரவிசாந்)