ஈழத்துச் சீர்காழி எனப் புகழ் பெற்றிருந்த சங்கீத பூஷணம் செல்லையா குமாரசாமி (SLEAS) இன்று புதன்கிழமை(16.08.2023) மாலை தனது 73 ஆவது வயதில் யாழில் காலமானார். சிறுநீரகப் பாதிப்புக்குள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றிக் காலமானார்.
10.01.1951 இல் யாழ்.வடமராட்சி கரவெட்டியில் பிறந்த இவர் உடுப்பிட்டி வீரபத்திரர் கோவிலடியில் வசித்து வந்துள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத் துறைப் பட்டதாரியான இவர் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் இசைத் துறை விரிவுரையாளராகவும், பிரதி முதல்வராகவும் சேவையாற்றியுள்ளார்.
பன்முக ஆளுமை கொண்ட இவர் ஈழத்துக்கென்றே தனித்துவமான பக்திப் பாடல் மரபை உருவாக்கியதுடன் ஏராளமான நாட்டிய நாடகங்களுக்கு இவர் இசையமைத்துப் பாடியுள்ளார். அத்துடன் சிறந்த ஓவியராகவும் விளங்கியவர்.
"பூத்த கொடி பூக்கள் இன்றித் தவிக்கின்றது" என்று ஆரம்பமாகும் இவர் பாடிய எங்கள் மண்ணின் பாடல் ஈழத்தமிழ் மக்கள் நெஞ்சங்களில் அழியாத இடம் பிடித்த பாடலாகும்.
இதேவேளை, இவரது இறுதி அஞ்சலியும் இறுதி யாத்திரையும் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (20.08.2023) இடம்பெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
(செ.ரவிசாந்)