தீவகத்தை கொழும்பு அரசு ஆட்சி செய்யும் புதிய அதிகாரக் கட்டமைப்பு: மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை விட மோசமானது!


 ஒருபுறம் பெயரளவிலே 13 ஆவது திருத்தம் ஊடாக அதிகாரப் பகிர்வினை அமுல்படுத்தப் போவதாகக் காட்டித் தமிழ்மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற அரசாங்கம் மறுபுறமாகத் யாழ்.தீவகத்தின் அனைத்து நிர்வாக வேலைப் பணிகளும் கொழும்பு மத்திய அரசால் நேரடியாக ஆட்சி செய்யக் கூடிய சட்ட வடிவமொன்று தயாரிக்கப்பட்டு அது கபினெட்டிற்கு வழங்கப்படுவதற்கான தயார்நிலையிலிலுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடந்த ஒரு வருடகாலமாக ஆராயப்பட்டு ரணில் விக்கிரமசிங்க இறுதியாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த போது ஒரு சில புத்திஜீவிகளை வரவழைத்து மூடிய அறைக்குள் இதுதொடர்பில் ஆராயப்பட்டிருக்கின்றது. இந்த அதிகாரக் கட்டமைப்பு மகாவலி அபிவிருத்தித் திட்டத்தை விட மிக மோசமான ஒன்றாக அமைந்துள்ளது எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.    

யாழ்.கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (03.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,    

டக்ளஸ் தேவானந்தா இவ்வாறான செயற்பாட்டிற்குத் துணைபோவார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கலாம். ஆனால், ஏதோ தேசியவாதிகள் போன்று காட்டிக் கொண்டு அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருக்கின்ற தமிழரசுக் கட்சி, புளொட், ரெலோ, விக்னேஸ்வரனின் அணி போன்ற தரப்புக்களுக்கு இந்த விடயங்கள் நன்கு தெரிந்திருந்தும் இவற்றை மூடி மறைத்து, ரணில் விக்கிரமசிங்கவிற்குத் தமிழ்மக்கள் மத்தியில் வெள்ளையடித்துக் காட்டித் தமிழ்மக்கள் முற்றுமுழுதாக யாழ்.தீவக நிலப்பரப்பை நிரந்தரமாகத் தமிழ்மக்கள் இழக்க வேண்டிய நிலைக்குத் துணை போகிறார்கள்.

தீவகத்தில் ஏற்கனவே மக்கள் தங்கள் வாழ்க்கையை நடாத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டமையால் அங்குள்ள மக்கள் படிப்படியாக வெளியேறி யாழ்ப்பாணத்திற்கும், வேறு பல பிரதேசங்களுக்கும் சென்றுள்ளனர்.  இந்நிலையில் தற்போதைய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அங்கு தமிழ்மக்களை முற்றிலுமாக இல்லாமல் செய்து சுற்றுலா போன்ற விடயங்களைக் காட்டி யாழ்.தீவகம் முழுவதையும் சிங்கள மயப்படுத்துவதே அரசின் நோக்கம்.              

தீவகப் பிரதேசங்கள் முழுவதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள். இந்தியாவிற்கும், இலங்கைக்குமிடையிலுள்ள இந்தப் பிரதேசங்கள் முழுவதும் சர்வதேசத்துடனும், இந்தியாவுடனும் பேரம் பேசும் வகையில் தங்களின் பிடியில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.   

வட-கிழக்கில் கடற்கரைப் பிரதேசங்கள் முழுவதிலும் அங்கு கடற்தொழில் செய்யும் மக்களுக்கு அவர்கள் தொழில் செய்ய முடியாதவாறு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தி அவர்களை

வெளிநாடுகளுக்குச் செல்ல வைப்பதற்கான திட்டம் காலாகாலமாகத் திட்டமிட்டுச் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. கடற்கரை முழுவதும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் என்பதால் அந்த இடங்கள் முழுவதையும் சிங்களமயமாக்கும் வகையிலேயே இவ்வாறான செயற்பாடுகள்இடம்பெறுகின்றன. இந்திய றோலர்கள் எம் கடற்பகுதிகளுக்குள் பிரவேசித்து எங்கள் கடற்தொழிலாளர்களின் சொத்துக்களை அழிக்கும் வகையில் தொழில் செய்ய அனுமதிப்பதும் இதன் ஒரு வடிவமே. அதன் இன்னொரு பரிணாமமாகவே யாழ்.தீவக ஆட்சிக்கான நிர்வாகக் கட்டமைப்புச் சட்டம் அமைந்துள்ளது.

வட- கிழக்குத் தமிழர் தாயகத்தில் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை மறுதலிக்கும் வகையில் எடுக்கப்படுகின்ற எந்தவொரு திட்டத்தையும் நாங்கள் ஒருபோதும் ஆதரிக்கப் போவதில்லை. இவ்வாறான செயற்பாடுகளை முற்றுமுழுதாக நாங்கள் எதிர்ப்போம். இவற்றுக்கெதிராக எங்கள் மக்களை நாங்கள் அணிதிரட்டுவோம். அதுமாத்திரமன்றி இத்தகைய செயற்பாடுகளுக்குத் துணைபோகும் தரப்புக்களுக்கு எதிராகவும் எங்கள் மக்கள் பார்வையை நாங்கள் திருப்புவோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

(செ.ரவிசாந்)