எட்டு வயதுச் சிறுமிக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்: திடீர் பரபரப்பு!


யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சல் காரணமாக அண்மையில்  அனுமதிக்கப்பட்ட மல்லாகத்தைச் சேர்ந்த எட்டு வயதுச் சிறுமி வைஷாலியின் கை மணிக்கட்டிற்குக் கீழ் அகற்றப்பட்டமைக்கு நீதி கோரி சுன்னாகம் பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை(07.09.2023) காலை-09.30 மணி தொடக்கம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேற்படி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் நீதி வேண்டும்....நீதி வேண்டும்...வைஷாலிக்கு நீதி வேண்டும்!, பணி நீக்கம் செய்! பணி நீக்கம் செய்! சம்பவத்துக்குக் காரணமான தாதியைப் பணி நீக்கம் செய்!!, பதில் சொல்...பதில் சொல்...பணிப்பாளரே பதில் சொல்! உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியும், பல சுலோகங்களைத் தமது கைகளில் ஏந்தியும் கடும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்கள் திடீரென யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு முன்பாக ஆஸ்பத்திரி வீதியைத் திடீரென மறித்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதன் காரணமாக வாகனங்கள் பலவும் வீதியில் நீண்ட வரிசையில் தரித்து நிற்க வேண்டிய நிலையேற்பட்டது. இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற பகுதிக்கு அருகில் நின்றிருந்த யாழ்ப்பாணம் பொலிஸார் வீதியை மறிக்க வேண்டாமென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களைக் கேட்டுக் கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்துப் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளார். எனினும், அவரை  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ஏனையவர்கள் சமாதானப்படுத்தியதுடன் வீதியின் ஒரு பகுதியால் வாகனங்கள் செல்வதற்கு வழிவிட்டும் நின்று எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து முற்பகல்-11 மணி வரை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டதுடன் ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குச் சென்ற நோயாளர்கள் மற்றும் வீதியால் சென்ற பொதுமக்களிடமும், யாழ்.பிரதான பேருந்து தரிப்பிட நிலையம் உள்ளிட்ட யாழ்.நகரப் பகுதிகளிலும் நேற்று நண்பகல்-12 மணி வரை  கையெழுத்துக்கள் சேகரிக்கும் பணிகள் இடம்பெற்றன. வயது வேறுபாடின்றிப் பல நூற்றுக்கணக்கானவர்கள் கையெழுத்துக்கள் சேகரிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கினர்.      இதேவேளை, யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  பொதுமக்களிடம் கையெழுத்துக்கள் சேகரிக்கும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு எதிர்வரும்-12 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்துக் கையெழுத்துக்களுடன் கூடிய கோரிக்கைகளடங்கிய மகஜர் நேரடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். 

(செ.ரவிசாந்)