வடக்கு- கிழக்குத் தழுவிய ஹர்த்தாலுக்கு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முழு ஆதரவு

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியாகவிருந்த ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை(20.10.2023) தமிழ்த்தேசியக் கட்சிகள் வடக்கு- கிழக்கு மாகாணம் தழுவிய ரீதியில் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ள நிலையில் ஹர்த்தாலுக்குப் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி முழுமையான ஆதரவை வழங்குவதாகப் புதிய ஜனாநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளரும், மூத்த பொதுவுடைமைவாதியுமான சி.கா.செந்திவேல் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

இலங்கையில் சகல அரசாங்க நிறுவனங்களிலும், அதற்கு அப்பாலும் ஊடுருவித் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்தி வந்த சிங்கள-பெளத்தப் பேரினவாதமானது தற்போது சட்டத்துறை, நீதித் துறையிலும் அப்பட்டமாகத் தலையிடுகின்ற புதிய சூழலை நாங்கள் காணக் கூடியதாகவுள்ளது. இதன் உச்சமாகத் தான் அண்மையில் முல்லைத்தீவு நீதிபதி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டே சென்றிருக்கக் கூடியதொரு அவலமானதொரு நிலை உருவாகியிருக்கின்றது. இதனை இந்த நாட்டில் வாழும் ஜனநாயகம், சுதந்திரம், மனித உரிமைகளை மதிக்கும் எவரும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.            

எனவே, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதியையும், சிங்கள- பெளத்த பேரினவாத சக்திகள் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் தொடர்ச்சியாக நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசாங்க நிர்வாகங்களின் ஊடாகவும் விடுத்து வருகின்ற பேரினவாத விஸ்தரிப்பு நடவடிக்கைகளையும் எங்களின் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிர்ப்பினைப் பெரியளவில்  வெளிக்காட்டும் வகையில் தமிழ்த்தேசியக் கட்சிகள் வடக்கு- கிழக்கில் ஹர்த்தாலை நடாத்துவதற்கு முடிவு செய்துள்ளன. ஆகவே,வடக்கு- கிழக்கைச் சேர்ந்த அனைத்து மக்களும் எவ்விதமான வேறுபாடுகளுமின்றிப் பேரினவாத அடக்கு முறைக்கு எதிரான நடவடிக்கை என்ற வகையில் ஹர்த்தால் வெற்றிபெறுவதற்குப் பூரண ஆதரவை வழங்க வேண்டுமெனவும் அவர் மேலும் அறைகூவல் விடுத்துள்ளார்.