கொக்குவில் குளப்பிட்டி வீதி வெள்ளவாய்க்காலில் நீண்டகாலத்தின் பின் சிரமதானம்

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டுக் கொக்குவில் அஞ்சலக குடும்பத்தினரால் கொக்குவில் குளப்பிட்டி வீதியில் அமைந்துள்ள 200 மீற்றர் நீளமான வெள்ளவாய்க்கால் நீண்டகாலத்தின் பின்னர் அண்மையில் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டது.

இந்தச் சிரமதான நடவடிக்கையில் கொக்குவில் அஞ்சலகத் தபாலதிபர், உதவித் தபாலதிபர்கள், ஊழியர்கள், கோண்டாவில்  உப தபாலதிபர் மற்றும் ஊழியர்கள், கோண்டாவில் மேற்கு உப தபாலதிபர், தாவடி உப தபாலதிபர், கொக்குவில் மேற்கு உப தபாலதிபர் ஆகியோர் குறித்த வெள்ளவாய்க்காலின் நிலைமையைக் கருத்திற் கொண்டு தாமாக முன்வந்து குறித்த சிரமதான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.  

மேற்படி வெள்ளவாய்க்காலில் நச்சுச் செடிகளான பார்த்தீனியச் செடிகள் உள்ளிட்ட செடிகள் வளர்ந்திருந்ததுடன் குப்பைக் கழிவுகளும் தேங்கி நின்றமையால் மழைகாலங்களில் வெள்ளநீர் வடிந்தோட முடியாமலிருந்தது. இதன்காரணமாக அப் பகுதி வீதியிலும் வெள்ளநீர் தேங்கி நின்றது. இதனால், பொதுமக்கள் பல்வேறு அசெளரியங்களை எதிர்கொண்டனர். இந் நிலையில்    

வெள்ளநீர் வடிந்தோடுவதற்குத் தடையாகவிருந்த பார்த்தீனியச் செடிகள் உள்ளிட்ட செடிகள் வெட்டி அகற்றப்பட்டதுடன் குப்பைகளும் அங்கிருந்து அகற்றப்பட்டது. 

இதேவேளை, குறித்த செயற்பாட்டினை முன்மாதிரியான செயற்பாடெனப் பலரும் பாராட்டியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 


(செ.ரவிசாந்)