தமிழர்களுக்கு ஒரு சட்டம்! சிங்களவர்களுக்கு வேறொரு சட்டம்? என்பதை நிருபித்துள்ள பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி!


அமைதியாக, மற்றவர்களுக்குப் பாதிப்பில்லாத வகையில் மிகக் குறைந்த சட்டத்தால் ஏற்கப்பட்ட ஒலிச் சமிக்ஞைகளுடன் தையிட்டிச் சிவன் ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருந்த சைவத்தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஒலிபெருக்கிகள் கைப்பற்றப்படுமென வழமையாக அராஜகத்தில் ஈடுபடும் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அச்சுறுத்திவிட்டுச் சென்றுள்ளார். இதன்மூலம் இந்த நாட்டில் தமிழர்களுக்கு ஒரு சட்டம்! சிங்களர்களுக்கு வேறொரு சட்டம்? என்பதைப் பலாலிப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மீண்டுமொருமுறை நிரூபித்துள்ளாரெனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

வலிகாமம் வடக்கின் தையிட்டிப் பிரதேசத்தில் தனியார் காணியை ஆக்கிரமித்து  அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்திற்கு எதிராகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மேற்படி விகாரை அமைந்துள்ள வீதியின் முகப்பிற்கு வெளியே மீண்டும் இடம்பெற்ற தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தின் நிறைவில் கடந்த சனிக்கிழமை(28.10.2023) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தையிட்டியில் சட்டத்தை மீறி விகாரைக் கட்டுமானம் கட்டப்பட்டுள்ளது.  அங்கு சட்டத்தை மீறிக் காணி உரிமையாளர்களின் சம்மதமில்லாமல் ஒலிபெருக்கிகள் கிராம மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாரிய சத்தத்துடன் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கெதிராக நடவடிக்கை எதுவும் பொலிஸாரால் எடுக்கப்படாத நிலையில் சைவத்தமிழ் மக்களை மாத்திரம் அச்சுறுத்துவது எதற்காக?

இந்த நாட்டு அரசு தமிழர்களை ஒருமாதிரியும், சிங்கள மக்களை வேறொரு மாதிரியும் நடாத்தி வரும் நிலையில் தமிழ்மக்கள் மீண்டும் மீண்டும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இந்த நாட்டில் தமிழ்மக்களுக்கு நீதி கிடைக்காது என்பது மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் சுட்டிக் காட்டினார். .