வட- கிழக்கெங்கும் வாழும் தமிழ்மக்கள் நாளைய நாளைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி இலங்கையின் சுதந்திரதினத்தை முற்றுமுழுதாகப் பகிஷ்கரிப்போம். இதன்மூலம் எங்களுக்குச் சுதந்திரம் கிடைக்கவில்லை, எங்களுக்கு நீதி வேண்டும், விடுதலை வேண்டும் என்ற உரிமைக் கோஷத்தை சர்வதேசத்திற்கும், இலங்கை அரசுக்கும் எழுப்புவதற்கான நாளாக, சொல்லுவதற்கான நாளாக நாளைய தினத்தைப் பயன்படுத்துவோம் எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும், சட்டத்தரணியுமான க.சுகாஷ் அறைகூவல் விடுத்துள்ளார்.
இலங்கையின் சுதந்திரதினம் நாளை ஞாயிற்றுக்கிழமை(04.02.2024) அனுஷ்டிக்கப்படுவதை முன்னிட்டு இன்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்ட அறைகூவலை விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாளையதினம் சிங்கள தேசம் தனது சுதந்திரநாளைப் பெருமெடுப்பில் கொண்டாடவிருக்கின்றது. பிச்சையெடுத்தாலும் சுதந்திரநாளைக் கொண்டாடுவோமென அவர்கள் விடாப்பிடியாக இருக்கிறார்கள். தமிழ்த்தேசத்தைப் பொறுத்தவரை இதுவொரு கரிநாள்.
எமக்குச் சுதந்திரம், விடுதலை, உரிமைகள் எவையும் கிடைக்கப் பெறவில்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக வட- கிழக்கெங்கும் நாளை தமிழ்மக்களும், பொது அமைப்புக்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளும், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் திரண்டு எமது எதிர்ப்பைப் பதிவு செய்யவிருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.