தமிழ் பொது வேட்பாளர் - வடக்கில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு

 


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு வடக்கில் உள்ள பெரும்பாலான கட்சிகள் ஆதரவு நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை தெரிவுசெய்வதற்காக செயற்பட்டுவரும் சிவில் சமூக அமைப்புகள் தெரிவித்துள்ளன.

அறிக்கையென்றினை வெளியிட்டு இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“2024 ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வவுனியாவில் கூடிய தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட மக்கள் அமைப்புகள் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றின. அந்தத் தீர்மானம் பின்வரும் விடயங்களைக் கொண்டிருந்தது.

1. தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமது இறைமையையும் சுயநிர்ணய உரிமையையும் பிரயோகிப்பதற்கான ஒரு களமாக ஜனாதிபதித் தேர்தலைக் கையாள்வது.

2 ஜனாதிபதித் தேர்தலை, ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் என்ற அடிப்படையில் நிராகரித்து, அத்தேர்தலை நடைமுறையில் ஈழத்தமிழ் மக்களுக்கான பொது வாக்கெடுப்பாகக் கையாள்வது.

3. அதற்கமைய ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்துவது.

4. அதற்காகச் சிவில் சமூகமும் தமிழ்த் தேசியக் கட்சிகளும் இணைந்து ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது.

5.தமிழ் மக்களின் நீண்ட கால அபிலாசைகளில் ஒன்றான இறைமையுடனான சுயநிர்ணய உரிமையை வெற்றி கொள்வதற்கான பொருத்தமான எதிர்காலக் கட்டமைப்புக்களை நோக்காகக் கொண்டு செயற்படுவது.

மக்கள் அமைப்புக்களும் அரசியற் கட்சிகளும் இணைந்த ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்குவதற்கான ஆரம்பக் கலந்துரையாடல்களைக் கட்சிகளுடன் மேற்கொள்வதற்காக தற்காலிகமான ஒரு குழு உருவாக்கப்பட்டது.

அக்குழு தமிழ்த்தேசியப் பரப்பில் உள்ள கட்சிகள் பெரும்பாலானவற்றைச் சந்தித்தது. அச்சந்திப்புகளின் விபரங்களையும் , விளைவுகளையும் இந்த ஆவணம் விபரிக்கிறது.

தமிழரசு கட்சியின் நடப்புத் தலைவர் மாவை சேனாதிராசா அவர்கள் கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்குக் கடந்த மே 19ஆம் திகதி வரையிலும் அவகாசம் கேட்டிருந்தார்.

மே 19ஆம் திகதி நடந்த மத்திய குழுக்கூட்டத்தின் அடிப்படையில் அக்கட்சியானது அது தொடர்பான முடிவை இப்போதைக்கு எடுப்பதில்லை என்று முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது.

எனினும் கட்சிக்குள் ஒரு பகுதியினர் தமிழ்ப் பொது வேட்பாளரை ஆதரிக்கிறார்கள். அதற்கு ஆதரவாகப் பொது வெளியில் பேசியும் வருகிறார்கள்.

செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவில் உறுதியாக உள்ளது என்பது வெளிப்படுத்தப்பட்டது.

பொது வேட்பாளர், தேர்தல் புறக்கணிப்பு ஆகிய இரண்டும் ஏறக்குறைய ஒரே அடிப்படையைக் கொண்டவை என்பதை அக்கட்சி ஏற்றுக் கொள்கின்றது.

எனினும் இரண்டு தெரிவுகளிலும் பொது வேட்பாளரில் தான் ஆபத்து அதிகம் என்று அக்கட்சி நம்புகின்றது. அந்த அடிப்படையில் அவர்கள் தேர்தலைப் புறக்கணிப்பது என்ற முடிவைத் தெரிவித்தார்கள்.

க. வி. விக்னேஸ்வரன் அவர்களின் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியானது தொடக்கத்திலிருந்தே பொது வேட்பாளரை ஆதரித்து வருகிறது. இந்த விடயத்தில் பொது மக்கள் அமைப்புகளின் முன்னெடுப்புக்கு அக்கட்சி தனது பூரண ஆதரவைத் தெரிவித்தது.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் (DTNA) கூட்டாக முடிவெடுத்து அறிவிப்பதற்குக் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.

எனினும் கூட்டுக்குள் காணப்படும் ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியானது தொடக்கத்திலிருந்தே பொது வேட்பாளர் என்ற கோரிக்கையை முன்வைத்து வந்தது. அதற்கு ஆதரவாகப் பொது வெளியில் பேசியும் வருகின்றது.

எம்முடனான சந்திப்பிலும் அக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்திய சுரேஷ் பிரேமச்சந்திரன் அதே நிலைப்பாட்டையே வெளிப்படுத்தியிருந்தார்.

சந்திப்பில் கலந்து கொண்ட தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பொது வேட்பாளர் என்ற விடயத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார்.

எனினும் அது ஒரு சாதாரண விடயம் அல்ல என்பதனை வலியுறுத்தினார். தமிழ் பொது வேட்பாளர் தோற்கக்கூடாது.

அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கட்சிகளும் பொதுமக்கள் அமைப்புகளும் இணைந்த ஒரு கட்டமைப்பு அவசியம் என்றும் அதற்குத் தாங்கள் தயார் என்றும் கூறினார்.

ந. ஸ்ரீகாந்தா அவர்களின் தமிழ்த் தேசியக் கட்சியானது பொது வேட்பாளரை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறது. அதில் உள்ள சாதக பாதகங்களை அக்கட்சி சுட்டிக் காட்டியது.

ஜனநாயகப் போராளிகள் கட்சி, பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறது. அதற்காகப் பொது மக்கள் அமைப்புகளோடு இணைந்து செயற்படத் தாம் தயார் என அதன் தலைவர் சி. வேந்தன் உள்ளிட்ட பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (DPLF/PLOTE) அமைப்பு தமது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதற்காகத் தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் கால அவகாசம் கேட்டார்.

ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது என்ற விடயத்தை அக்கட்சி கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், அதில் இருக்கக்கூடிய இடர்களைக் குறித்து அக்கட்சி ஆழமாக யோசிக்கின்றது. எனவே தமது முடிவை அறிவிப்பதற்குக் கால அவகாசம் கேட்டது.

அங்கத்துவக் கட்சிகளில் அநேகமானவை தமது ஆதரவு நிலைப்பாட்டை வெளிப்படுத்திய போதும் ஜனநாயகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எனும் அடிப்படையில் ஒன்று கூடி பொது வேட்பாளர் தொடர்பான தம்முடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கக் கால அவகாசம் கோரியிருக்கின்றனர்.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் பொது வேட்பாளர் என்ற தெரிவைத் தொடக்கத்தில் இருந்தே ஆதரித்து வருகிறது. அதன் மேடைகளில் ஏற்கனவே அது தொடர்பாகப் பேசத் தொடங்கிவிட்டது. எம்முடனான சந்திப்பிலும் பொ. ஐங்கரநேசன் அவர்கள் அதே நிலைப்பாட்டைத் தெரிவித்தார்.

அனந்தி சசிதரனின் ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம் பொது வேட்பாளரைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்கிறது.அதற்கு ஆதரவு தெரிவிக்கின்றது.

கட்சிகளுடனான சந்திப்புகளின் பின்னர் கட்சித் தலைவர்களைத் தவிர கட்சிகளுக்குள் ஜனாதிபதித் தேர்தலைக் குறித்துத் துலக்கமான, வெளிப்படையான நிலைப்பாடுகளை கொண்டிருக்கும் அரசியல்வாதிகளையும், கட்சிகளைச் சாராத அரசியல்வாதிகளையும் எமது குழு சந்தித்தது.

அதன்படி க. அருந்தவபாலன் அவர்கள் பொது வேட்பாளர் என்ற தெரிவை முழுமையாக ஏற்றுக் கொள்கிறார். அதற்காக உழைக்கவும் தயாராகக் காணப்படுகின்றார். எமது குழு தமிழரசுக் கட்சியின் தலைவரை உத்தியோகபூர்வமாக சந்தித்தது.

எனினும் எதிர்காலத்தில் கட்சித் தலைமைக்காகப் போட்டியிடக்கூடிய இருவரையும் சந்திப்பது பொருத்தமானதாக இருக்குமென விதந்துரைக்கப்பட்டதால் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களையும் எம் ஏ சுமந்திரன் அவர்களையும் சந்திப்பது என்று குழு முடிவெடுத்தது.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தமிழரசுக் கட்சிக்குள் பொது வேட்பாளர் என்று தெரிவைத் தொடர்ச்சியாக ஆதரித்து வருகிறார். அதற்கு ஆதரவாகப் பொது வெளியில் பேசியும் வருகிறார். எமது சந்திப்பிலும் தமது தனிப்பட்ட ஆதரவு நிலைப்பாட்டை அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர், எம் ஏ சுமந்திரன் அவர்கள் பொது வேட்பாளர் தொடர்பில் உள்ள ஆபத்துக்களைச் சுட்டிக்காட்டிக் கருத்துத் தெரிவித்தார்.

எனினும் தமிழ் மக்களை ஒன்று திரட்டுவதற்கு இது ஒரு சரியான தருணம் என்றும், இத்தேர்தலில் தமிழ் மக்களை ஒன்று திரட்டத்தவறினால் அடுத்த ஆண்டு நடக்கக்கூடிய எல்லாத் தேர்தல்களிலும் தமிழ் மக்கள் சிதறி வாக்களிப்பார்கள் என்பதையும் சுட்டிக்காட்டிய பொழுது, அந்தத் தர்க்கத்தை அவர் ஏற்றுக்கொண்டார்.

தமிழ் மக்களை ஒரு மையத்தில் ஒன்றிணைப்பது என்ற விடயத்தில் அவருக்கும் எமக்குமிடையே வேறுபாடுகள் இருக்கவில்லை. எம்மைச் சந்திக்கும் பொழுது அவர் பொது வேட்பாளரை நிராகரிப்பதற்கு ஒரு காரணத்தை வைத்திருந்தார்.

ஆனால் சந்திப்பு முடிந்த பொழுது பொது வேட்பாளரை ஆதரிப்பதற்கு மிகப் பலமான ஒரு நடைமுறைக் காரணத்தை ஏற்றுக் கொண்டதைத் தெரிவித்துச் சென்றார்.

பொது வேட்பாளர் தேவையா என்பது தொடர்பாகப் பொதுவெளியில் உரையாடல்களை நடத்துவது நல்லது என்று எம். ஏ சுமந்திரன் அவர்கள் சுட்டிக் காட்டியிருந்தார் .

எனினும் பொது வேட்பாளர் தொடர்பாக வவுனியாவில் 2024 ஏப்பிரல் 30ம் திகதி நடைபெற்ற பொது மக்கள் அமைப்புகளின் கூட்டிணைவும், அதன் முன்னரும் பின்னரும் எம்மால் பல்வேறு மக்கள் அமைப்புகளுடன் நடத்தப்படும் கலந்துரையாடல்களும் பொது வெளியில் நடத்தப்படும் உரையாடல்கள்தான்.

அவ்வாறான உரையாடல்களே வவுனியாவில் பொதுமக்கள் அமைப்புகளின் கூட்டிணைவுக்கும், பொது வேட்பாளர் தொடர்பான கொள்கை அடிப்படைகளுக்கும், வவுனியாப் பிரகடனத்திற்கும் வழிவகுத்திருந்தன, இன்று வலுச் சேர்க்கின்றன.

இன்றுள்ள நிலையில் பொது வேட்பாளர் தேவையா என்ற உரையாடலுக்குப் பதிலாகப் பொது வேட்பாளர் பிரதிநிதித்துவப் படுத்தும் கொள்கை நிலைப்பாடுகளுக்கு ஆதரவைத் திரட்டும் உரையாடல்கள் நிகழ்வதே பொருத்தமானது என்பது ஈண்டு குறிப்பிடத்தக்கது.

இச் சந்திப்புக்கள் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்தவை. ஏனைய மாவட்டங்களில் உள்ள தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளோடும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போதைய உறுப்பினர்கள், ஏனைய அரசியற் பிரமுகர்கள் என்பவர்களுடனும் எதிர்காலத்தில் சந்திப்புகள் இடம்பெறும். அந்த சந்திப்புக்களின் விபரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

மேற்கண்ட சந்திப்புகளின் பின் பொது மக்கள் அமைப்புகள் மீண்டும் விரைவில் நேரடியாகச் சந்திப்பது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அச்சந்திப்பில் கட்சிகளின் நிலைப்பாடுகள் ஆராயப்படுவதுடன் பொது மக்கள் அமைப்புகளின் கூட்டிணைவின் அடுத்த கட்ட வேலைத் திட்டங்கள், நடவடிக்கைகள் குறித்த முடிவுகளும் மேற்கொள்ளப்படும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.