செஞ்சோலைச் சிறுவர் இல்லம் மீதான சிறிலங்கா விமானப் படையினரின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளின் 18 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு புதன்கிழமை (14.08.2024) மாலை-05.30 மணி முதல் உரும்பிராய் மேற்குப் பகுதியில் அப் பகுதி இளைஞர்களின் ஏற்பாட்டில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.
இளம் சமூகச் செயற்பாட்டாளர் நகுலேஸ்வரன் விஜயதரன் தலைமையில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகள், பணியாளர்கள் 61 பேரையும் நினைந்து ஒரு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டவர்களின் உருவப்படத்திற்கு முன்பாக நினைவுச் சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்த மாணவிகளின் நினைவாக உரும்பிராயைச் சேர்ந்த 12 பாடசாலை மாணவர்களுக்குத் தலா-1200 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அத்துடன் உரும்பிராய் சோழந் தோட்டம் வைரவர் ஆலய வளாகத்தில் பயன்தரு மரக் கன்றுகளும் நடுகை செய்யப்பட்டன.