சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் முன்னாள் தலைவரும், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர் நலன்புரிச் சங்க ஸ்தாபகருமான அமரர்.மாமனிதர் சி.சிவமகாராசாவின் 18 ஆவது ஆண்டு நினைவு தினம் கடந்த செவ்வாய்க்கிழமை (20.08.2024) முற்பகல்-10 மணி முதல் தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. .
தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பணியாளர் நலன்புரிச் சங்கத் தலைவர் திருமதி.சு.கெளரிதேவி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் கூட்டுறவுத் திணைக்கள அபிவிருத்தி உதவி ஆணையாளர் கி.சந்திரசேகரன் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் கூட்டுறவுத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் இ.தனுஷன் சிறப்பு விருந்தினராகவும், தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத் தலைவர் த.திருநாவுக்கரசு, அமரர் சி.சிவமகாராசா அறநிதியச் சபையின் தலைவர் ந.உமாகரன் ஆகியோர் கெளரவ விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
கூட்டுறவுச் சங்க முன்றலில் அமைந்துள்ள சிவமகாராசாவின் உருவச் சிலைக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அன்னாரின் 18 ஆவது ஆண்டு நினைவு தினத்தைக் குறிக்கும் வகையில் 18 நினைவுத் தீபங்கள் ஏற்றி அஞ்சலிக்கப்பட்டது. தொடர்ந்து மண்டபத்தில் சிவமகாராசாவின் உருவப் படத்திற்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அதனைத் தொடர்ந்து மறைந்த கூட்டுறவாளர்களுக்கு இரண்டு நிமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்வில் ஓய்வுநிலை ஆசிரியர் கலைமாமணி ச.தயானந்தன் கலந்து கொண்டு மாமனிதர் சிவமகாராசா ஞாபகார்த்த நினைவுப் பேருரை நிகழ்த்தினார். அத்துடன் செம்முகம் ஆற்றுகைக் குழுவினரின் 'தாயின் கனவு' குறுநாடகம் ஆற்றுகையும் நடைபெற்றது.
நிகழ்வில் இளம் சமூகச் செயற்பாட்டாளர் ந.விஜயதரன், இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தெல்லிப்பழைப் பிரிவுத் தலைவர், அமரர்.சிவமகாராசாவின் உறவுகள், தெல்லிப்பழைப் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் பொதுச்சபைப் பிரதிநிதிகள், இயக்குநர் சபைப் பிரதிநிதிகள், கூட்டுறவுப் பணியாளர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.