'வடலி அம்மன்' என அழைக்கப்படும் சுன்னாகம் மயிலணி ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர உற்சவம் கடந்த புதன்கிழமை (07.08.2024) காலை -07.30 மணியளவில் விசேட அபிஷேகம், பூசையுடன் ஆரம்பமாகி மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
ஆடிப் பூரத்தை முன்னிட்டுக் காலை-09 மணியளவில் சுன்னாகம் மகாகாளி அம்மன் ஆலயத்திலிருந்து ஆண், பெண் அடியவர்களின் பாற்காவடிகளின் ஊர்வலப் பவனி ஆரம்பமாகிக் காலை-09.30 மணியளவில் ஆலயத்தை வந்தடைந்தது. ருதுசாந்தியைத் தொடர்ந்து அம்மனுக்கு விசேட பாலாபிஷேகம், கும்ப அபிஷேகம் என்பன இடம்பெற்றன. தொடர்ந்து அம்மன் அலங்காரநாயகியாக உள்வீதி, வெளிவீதி உலா வரும் திருக்காட்சியும் நடந்தேறியது.
இதேவேளை, மேற்படி ஆலயத்தில் கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக மேற்படி ஆலயத்தில் ஆடிப்பூர நாளில் பாற்காவடிகளின் ஊர்வலப் பவனி இடம்பெற்று வருவதாக ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ.நா.சிவசங்கரக் குருக்கள் தெரிவித்தார்.
(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)