நல்லூர்க் கந்தன் ஆலயம் என்றாலே அழகு தான். நல்லூரானை 'அலங்காரக் கந்தன்' என்றும் சிறப்பித்து அழைக்கின்றோம். நல்லூர்க் கந்தன் ஆலயம் எங்கள் பண்பாட்டின் பெருங் கோயில் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் தெரிவித்தார்.
நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் குரோதி வருட மஹோற்சவப் பெருந் திருவிழாவை முன்னிட்டு மேற்படி ஆலயச் சூழலில் இடம்பெற்று வரும் ஆன்மீக நிகழ்வொன்றில் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
அழகுக்கும், ஆன்மீகத்துக்குமான இடைவெளி மிகச் சிறியது என்று சொல்வார்கள். அழகாக இருப்பது ஆன்மீக உணர்வைத் தருகிறது.
சைவசமயமும் கலைகளும் ஒன்றுடனும் ஒன்று பின்னிப் பிணைந்தவைகள். அர்ச்சனை பாட்டேயாகும் என்று சிவபெருமான் சுந்தரமூர்த்தி நாயனாருக்குச் சொல்லிப் பாடடா....என்று கூறியது ஒரு வரலாறு. சிவபெருமானே நடராஜப் பெருமானாக, நாட்டியக் கலையின் மூலவராக விளங்குகின்றமை தனித்துவமானது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
(செ.ரவிசாந்)