வடக்கு- கிழக்காக, சாதியாக, சமயமாக எங்கள் தமிழ்த்தேசிய இனம் தற்போது கூறு போடப்பட்டுள்ள நிலையில் மீளவும் மக்களைத் தேசியமாக ஒருங்கிணைக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்காகத் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் வெற்றிபெறுவார், உலக நாட்டுத் தலைவர்களுடன் பேசுவார் என்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டுக் களமிறக்கப்படவில்லை. வெற்றிபெறாத தேர்தலில் ஏன் போட்டி? என்று பலரும் கேட்கிறார்கள். ஜனாதிபதிக் கதிரைக்காக அவர் போட்டியிட மாட்டார். தமிழ்த்தேசிய விடுதலைப் போராட்டத்தை ஆயுதப் போராட்டத்தின் பின்னரான அடுத்தகட்டம் நோக்கி நகர்த்துவதற்கான பாரிய பங்களிப்பைத் தமிழ்ப் பொதுவேட்பாளர் செய்வார் எனத் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத் தலைவரும், சூழலியாளருமான பொன்னுத்துரை ஐங்கரநேரசன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்-21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளராகப் போட்டியிடவுள்ள பா. அரியநேத்திரனை ஆதரித்து தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ஏற்பாட்டில் பொதுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை (16.09.2024) மாலை யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற போது நிகழ்வுக்குத் தலைமை தாங்கி உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.