சித்திரத் தேரில் தெல்லியூர் துர்க்காதேவி எழிலுறப் பவனி: குவிந்த காவடிகள்!

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலயத்தின் குரோதி வருட மஹோற்சவப்  பெருவிழாவின் தேர்த் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை (14.09.2024) மிகவும் சிறப்பாகவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

நேற்றுக் காலை-07.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் ஆரம்பமாகி இடம்பெற்றதைத் தொடர்ந்து துர்க்கை அம்பாள் ஆலய உள்வீதியில் அலங்கார  நாயகியாகத் திருநடனத்துடன் எழுந்தருளிச் சித்திரத்தேரில் ஆரோகணித்தாள். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன் அபிராமி அந்தாதியின் சில பாடல்களைப் பண்ணுடன் ஓதினார். அதனைத் தொடர்ந்து சிதறுதேங்காய்கள் உடைக்கப்பட்டு விசேட தீபாராதனை வழிபாடுகள் இடம்பெற்றத்தைத் தொடர்ந்து காலை-09.15 மணியளவில்  அடியவர்களின் அரோகராக் கோஷங்கள் முழங்கச் சித்திரத்தேர் பவனி ஆரம்பமாகியது. சித்திரத்தேர் முற்பகல்-10 மணியளவில் இருப்பிடம் சென்றடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.       

சித்திரத்தேர் பவனி வந்த வேளையில் பல நூற்றுக்கணக்கான ஆண் அடியவர்கள் அங்கப் பிரதட்ஷணை செய்தும், நூற்றுக்கணக்கான பெண் அடியவர்கள் அடியளித்தும், மாதர்கள்  பலரும் கற்பூரச் சட்டிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றினர். அதுமாத்திரமன்றித் தேர்த் திருவிழாவை முன்னிட்டுப் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் வகை வகையான காவடிகள் எடுத்தும், பெண் அடியவர்கள் பலரும் பாற்காவடிகள் எடுத்தும் நேர்த்திக் கடன்கள் நிறைவேற்றியதையும் காண முடிந்தது.

இதேவேளை, பல்லாயிரக்கணக்கான அடியவர்கள்  மேற்படி ஆலயத் தேர்த் திருவிழாவில் கலந்து கொண்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

 

(சிறப்புத் தொகுப்பு:- செ.ரவிசாந்)