முதன்முதலாக அமெரிக்காவுக்கு கப்பல் விட்ட மண் வல்வெட்டித் துறை மண். அன்னபூரணிக் கப்பலுக்குச் சொந்தக்காரர்கள் வல்வெட்டித்துறை மண்ணைச் சேர்ந்தவர்கள். உலகமெங்கணும் தமிழ்மண்ணின் பெருமையை எடுத்தியம்பிய தலைவர் பிறந்த மண் வல்வெட்டித்துறை மண். பல சாதனைகளைப் படைத்த வல்வெட்டித்துறை மண் தான் சைவத்திற்குத் தலைமை தாங்கக் கூடிய தகமையாளரான மோகனதாஸ் சுவாமிகளையும் சைவத்தமிழ் உலகத்திற்குத் தந்திருக்கிறது எனக் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் முதல்வரும், பிரபல பட்டிமன்றப் பேச்சாளருமான செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் புகழாரம் சூட்டினார்.
சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகளின் பவள விழாவும் அறம் பாலிக்கும் ஞான மோகனம் நூல் வெளியீடும் கடந்த சனிக்கிழமை (31.08.2024) சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்ற போது கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்திய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
1950 ஆம் ஆண்டில் மடங்கள் என்றால் அது சந்நிதி ஆலயச் சூழலிலேயே இருந்ததாக வரலாறு எடுத்தியமுப்புகிறது. அதிலும் 50 மடங்கள் முன்னர் இருந்ததாக 'ஆற்றங்கரையான்' எனும் நூலை எழுதிய முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். கெளரி பாலா என்கின்ற ஜேர்மன் சுவாமிகள், பன்றிக் குட்டிச் சுவாமிகள் உள்ளிட்ட நான்கு வெளிநாட்டுச் சுவாமிமார்கள் உட்படச் சந்நிதியிலே மடம் அமைத்துத் திருத்தொண்டுகள் புரிந்திருக்கிறார்கள். மடம் என்றால் சந்நிதியான் ஆச்சிரம மடம் தனித்துவமானது.
மோகனதாஸ் சுவாமிகளின் இளமைக் காலத்திலேயே அவருக்குத் தொண்டுகள் செய்வதில் மிகுந்த நாட்டமிருந்தது. இதனால் தான் ஆனந்த ஆச்சிரமத்தில் தன்னை இணைத்து மயில்வாகனம் சுவாமிகளின் ஆற்றுப்படுத்தலில் சிறப்பாகப் பணிகள் செய்தார். 1985 ஆம் ஆண்டு வரை ஆனந்த ஆச்சிரமத்தில் ஒரு தொண்டராகச் செயற்பட்டு வந்த மோகனதாஸ் சுவாமிகள் 1988 ஆம் ஆண்டில் சந்நிதியான் ஆச்சிரமத்தை ஸ்தாபித்துச் சிறந்த திட்டமிடலுடன் நிர்வகித்து வருகிறார்.
1993 ஆம் ஆண்டு முதல் ஆச்சிரமத்தில் வெள்ளிக்கிழமை தோறும் ஆன்மீக நிகழ்வுகளை ஏற்படுத்தத் தொடங்கி 1995 ஆம் ஆண்டு தற்போதைய ஆச்சிரம மண்டபத்திற்குக் குடிபெயர்ந்து 1998 ஆம் ஆண்டு முதல் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் வெளியீடாக ஞானச்சுடர் என்ற அற்புதமானதொரு சஞ்சிகையை வெளிக் கொணர்ந்து சைவத்தமிழ் உலகத்திற்கு மோகனதாஸ் சுவாமிகள் பெரும் தொண்டாற்றி வருகிறார். தமிழகத்திலுள்ள ஆதீனங்களுக்கு கூடத் தற்போது இலங்கையிலிருந்து தவறாது ஒரு சஞ்சிகை கிடைக்கப் பெறுகிறது என்றால் அது ஞானச்சுடர் சஞ்சிகை மட்டுமே எனவும் குறிப்பிட்டார்.