தமிழரசுக் கட்சியின் பெரும்பாலானோர் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கே ஆதரவு!

இலங்கைத் தமிழரசுக் கட்சியில் உள்ள மிகச்சிறு பகுதியினர் தவிர ஏனைய அனைவரும் வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தமிழ்ப் பொதுவேட்பாளருக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறார்கள் எனத் தமிழ்த்தேசியப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரனுக்கான தமிழ்த்தேசியப் பொதுக் கட்டமைப்பின் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.  

நேற்றுப் புதன்கிழமை (03.09.2024) யாழில் வெளியிடப்பட்டுள்ள குறித்த நீண்ட தேர்தல் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

தமிழ்த்தேசிய இனமானது கடந்த ஏழு தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைக்காகப் பல்வேறு வழிமுறைகளில் போராடி வருகிறது. இப் போராட்டத்தின் ஒரு வழிமுறையாகத், தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு ஆகிய நாம் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிறுத்தியுள்ளோம். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் சங்குச் சின்னத்தின் கீழ் தமிழ்ப் பொதுவேட்பாளராக முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

தமிழ்த்தேசியப் பொதுக்கட்டமைப்பு எனப்படும் இந்தக் கூட்டணி கடந்த 15 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட கூட்டணிகளில் ஒப்பீட்டளவில் பெரிய அணியாகும். இது தமிழ் ஒற்றுமையின் புதிய நம்பிக்கையாகவும், எதிர்காலத் தமிழ் அரசியலுக்கான பலமான அடித்தளமாகவும் எழுச்சிபெறும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.