நெடுந்தாரகைப் பயணிகள் படகு சேவை மீண்டும் ஆரம்பம்

சுமார் ஒரு வருடத்தின் பின்னர் நெடுந்தாரகைப் பயணிகள் படகு நேற்று வியாழக்கிழமை (19.09.2024) முதல் மீண்டும் தனது சேவையை ஆரம்பித்துள்ளது. 

52 மில்லியன் ரூபா செலவில் படகில் முன்னெடுக்கப்பட்ட திருத்தப் பணிகளையடுத்து வடக்கு மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ். எம். சார்ள்ஸ் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரிடம் நேற்றுக் காலை நெடுந்தாரகைப் பயணிகள் படகைச் சம்பிரதாயபூர்வமாகக் கையளித்தார். இந் நிகழ்வில் வடக்கு மாகாணப் பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.   

நெடுந்தாரகைப் பயணிகள் படகின் திருத்தப் பணிகளுக்காகத் துரித நடவடிக்கையை முன்னெடுத்த ஜனாதிபதி, ஜனாதிபதி செயலகத்தினர் மற்றும் துறைசார் அமைச்சுக்கு நன்றி தெரிவித்த வடக்கு ஆளுநர் தீவுகளுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதேவேளை, நெடுந்தாரகைப் படகு தினமும் நெடுந்தீவிலிருந்து குறிகட்டுவான் வரை சேவையில் ஈடுபடும். குறித்த படகில் ஒரேதடவையில் 80 பேர் பயணிக்க முடியும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.