"தனியொருவனுக்கு உணவில்லை எனில் செகத்தினை அழித்திடுவோம்" என்பது பாரதியின் கூற்று. உண்டி கொடுத்து உயிர் கொடுத்து உயர்ந்து நிற்கும் ஒருவர் சத்தம் சந்தடியின்றி எங்கள் மண்ணில் உயர் பணிகள் மேற்கொண்டு வருகின்றார்
இலங்கையில் வருடம் 365 நாட்களும் மூன்று வேளை உணவளிப்பது மட்டுமன்றி ஆதரவற்ற உறவுகளைப் பராமரிப்பதுடன் சமூக மட்டத்தில் வசதியற்ற குடும்பங்களை இனம் கண்டு அவர்களின் மருத்துவம் கல்வி வாழ்வாதாரத்திற்கு உறுதுணையாகத் தொண்டுகளையும் ஆற்றித் தனிப்பெரும் தகைமையாளராக வாழும் மனிதர் இவர். சந்நிதிக் கந்தனின் நடமாடும் வடிவாகவே பலர் அவரைக் காணகின்றனர்.
வீரமும், துணிவும் இயல்பாய் வளரும் யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் செந்திவேல், மல்லிகா தம்பதியினருக்கு 31.08.1949 ஆம் ஆண்டு மோகனதாஸ் எனும் நாமத்துடன் இம் மண்ணில் பிறந்த பெருந்தகையே இன்று சாதனைத் தமிழனாக உயர்ந்து நிற்கின்றார்.
செல்வச்சந்நிதியில் ஆனந்தாச்சிரமம் நடாத்திய மயில்வாகனம் சுவாமிகளை சிறுவயது முதல் தனது குருவாக ஏற்று அவர் காட்டிய வழியில் பணிகளை மேற்கொண்ட இவர். 1985 இல் சுவாமி பூரணம் அடையும் வரை அன்னதானம் இடும் பணியை அவரது தலைமையின் கீழ் செவ்வனே செய்தார். தொடர்ந்து இடம்பெற்ற இராணுவ நடவடிக்கைப் பாதிப்புகளுக்குப் பின்னர் 1988 இல் சந்நிதியான் ஆச்சிரமத்தை நிறுவித் தன்பணிகளைத் தொடர்ந்தார்.
05.05.1995 இல் சந்நிதியான் ஆச்சிரமம் இன்றுள்ள இடத்தில் தனது பணிகளை மேற்கொள்ளத் தொடங்கிற்று. சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதன்மையான பணி பசிப்பிணி போக்குதல் ஆகும். இன்று (2024) 65 இற்கும் மேற்பட்ட முதியவர்கள் மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு ஆதரிக்கப்படுகின்றார்கள். பெருநாள்களில் உடுபுடைவைகள் வழங்கியும் அவர்கள் கௌரவிக்கப்படுகின்றார்கள். இதைவிடக் கோவில் சூழலுக்கு வரும் அன்பர்கள் எவரெனினும் உணவு வழங்கப்பட்டு ஆதரிக்கப்படுகின்றனர்.
கல்விப் பணியில் கரம் கொடுப்பதில் சமய பேதம் பாராது மோகன் சுவாமி உதவி வருகின்றார். பல்கலைக்கழக மாணவர்கள் நூற்றைம்பதிற்கும் மேற்பட்டோர் சமய சமூக பேதம் இன்றி மாதம் தோறும் 6000 ரூபா வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர். இதைவிடக் கற்றல் தேவையுடையோருக்கு துவிச்சக்கரவண்டிகள் புத்தகப் பைகள் போன்ற ஏற்ற உதவிகளை வழங்கி அவர்களுக்கு உதவுகின்றார்.
2014 ஆம் ஆண்டில் மலையகத்தில் மீரியப்பொத்தவில் ஏற்பட்ட மண்சரிவின் போது முதன்முதலாக அந்த மக்களைத் தேடி மோகன் சுவாமியின் தலைமையில் சந்நிதியான் ஆச்சிரம உதவிகளுடன் சென்ற பாரவூர்திகளே முதலில் சென்றன. அன்று தொடக்கம் ஆச்சிரமப் பணிகள் இலங்கையின் பல பாகங்களுக்கும் விரிவுற்று வருகின்றது. பிரதேச வேறுபாடு இன்றி வாழ்வாதாரப் பணிகளை வழங்கி வருகின்றர். நலிவுற்ற மக்கள் பலர் இதனால் பெருநன்மை அடைந்து வருகின்றனர்.
ஆச்சிரமத்தினால் நடத்தப்படும் நடமாடும் மருத்துவ சேவைகள் ஊடாகப் பலர் நன்மை அடைகின்றனர். இதைவிட வைத்தியசாலைகளின் மருந்துத் தேவைகளையும் குறிப்பிடத்தக்க அளவில் தீர்ப்பதற்குத் தன்னாலான பங்களிப்புகளை நல்கி வருகின்றார்.
சந்நிதியான் ஆச்சிரமத்தால் வெளியிடப்படும் ஞானச்சுடர் 25 ஆண்டுகளைக் கடந்து மாதா மாதம் தொடர்ச்சியாக ஒழுங்காக வெளிவருகின்ற ஆன்மீக சஞ்சிகையாக விளங்குகின்றது. உலகெங்கும் ஆன்மீக ஞான ஒளியைத் தன் எழுத்துக்களால் பரப்பி வருகின்றது. சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையில் வெள்ளிக்கிழமை தோறும் ஆன்மீக நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பங்கேற்றவர்கள் இன்று பிரபல சொற்பொழிவாளர்களாகவும் பாடகர்களாகவும் விளங்குகின்றனர்.
ஆன்மீகப் பணி என்பது கோவிலை மையப்படுத்திய பணி என்பதற்கு அப்பால் குடிகளைத் தழுவிய பணிகள்தான். - அதிலும் சமய பேதம் பாராது மனிதத்தை உயர்வாகப் போற்றும் பணிகள்தான் - என்று நிருபித்து வாழ்ந்து காட்டுகின்றார்.
சேவையால் சிறப்புற்ற இச் செம்மலுக்கு யாழ் மாநகராட்சி சபையின் யாழ் விருது (2018) தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் வழங்கிய கௌரவ டாக்டர் (2017) என ஐம்பதிற்கும் மேற்பட்ட கௌரவப் பட்டங்கள் வழங்கப்பட்டுள்ளன. அந்த வகையில் டான் தொலைக்காட்சி தனது உயரிய விருதான சாதனைத் தமிழனாக இப்பெருந்தகையைக் கௌரவிக்கின்றது.
இதேவேளை, சிவபூமி அறக்கட்டளை நிறுவுனர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் (2018), திருமறைக்கலாமன்ற இயக்குநர் (மறைந்த) அருட்கலாநிதி நீ. மரியசேவியர் (2019), நாடகத்துறைப் பேராசிரியர் சி. மௌனகுரு (2020) முல்லைமண்ணின் தொழில் முயற்சியாளர் சாஜிராணி (2021), யாழ். பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் பத்மநாதன் (2022) இசையமைப்பாளர் கண்ணன் (2023) என்ற வரிசையில் 2024 ஆம் ஆண்டுக்கான சாதனைத் தமிழன் விருதை கலாநிதி செ. மோகனதாஸ் சுவாமிகளுக்கு வழங்குவதில் டான் குழுமம் பெருமையும் மகிழ்ச்சியும் கொள்கின்றது.
செந்தமிழ்ச்சொல்லருவி சந்திரமௌலீசன் லலீசன் (தலைவர், டான் சாதனைத்தமிழன் விருதுத் தெரிவுக் குழு)