சுன்னாகத்தில் வெள்ளத்தால் கடும் பாதிப்பு: உதவிக் கரம் நீட்டிய புலம்பெயர் வாழ் கோண்டாவில் உறவு

யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் மழைவெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு அத்தியாவசியமான உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.     

கோண்டாவிலைச் சேர்ந்த தற்போது புலம்பெயர்ந்து ஜேர்மன் நாட்டில் வாழும் இராசரத்தினம் சந்திரனின் 60 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் சனிக்கிழமை (07.12.2024) சுன்னாகம் ஜே-199 மற்றும் ஜே-198 கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா நான்காயிரம் ரூபா பெறுமதியான அத்தியாவசிய உலருணவுப் பொருட்கள் கையளிக்கப்பட்டுள்ளன.

குறித்த உலருணவுப் பொருட்கள் கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ அற்புதநர்த்தன விநாயகர் சனசமூக நிலைய நிர்வாகத்தின் ஊடாக சமூகச் செயற்பாட்டாளர் சுதாகரனின் ஒருங்கிணைப்பில் ஊடகவியலாளர் ரவிசாந்தின் சிபாரிசில் குறித்த உலருணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.

ஜே-199 கிராம அலுவலர் பிரிவான சுன்னாகம் மேற்குப் பகுதியிலும், சுன்னாகம் மேற்குப் பருத்திக் கலட்டி ஆகிய பகுதிகளிலும், ஜே-198 கிராம அலுவலர் பிரிவைச் சேர்ந்த சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் மத்தி ஆகிய பகுதிகளிலும் குடியிருப்புப் பகுதிகள், வீதிகள் மற்றும் விவசாய நிலங்களில் அடைமழை காரணமாகக் கடும் மழைவெள்ளநீர் தேங்கியமையால் குறித்த பகுதிகளைச் சேர்ந்த 36 குடும்பங்களைச் சேர்ந்த 119 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர்.  

இதன் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் பல நாட்களாகப் பெரும் அசெளகரியங்களுக்கு மத்தியில் தங்கியிருந்தனர். 

மழை வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுச் சில நாட்களின் பின்னர் குறித்த பகுதிகளில் பதிவான வெள்ள அனர்த்தம் தொடர்பான காட்சிகளை இத்துடன் இணைத்துள்ளோம்.        


சில பகுதிகளில் இன்னும் மழைவெள்ளம் தேங்கியுள்ளமையால் மக்கள் தொடர்ந்தும் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் மழைவெள்ள அனர்த்தத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட 13 குடும்பங்களுக்கு எந்தவொரு நிவாரண உதவிகளும் வழங்கப்படவில்லை என மக்கள் சுட்டிக் காட்டியதைக் கருத்திற் கொண்டு குறித்த உதவி வழங்கி வைக்கப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.