சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்றுச் செவ்வாய்க்கிழமை (10.12.2024) முற்பகல்-10 மணியளவில் யாழ்.மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் யாழ்ப்பாணப் பொதுநூலகத்தின் முன்பாக சர்வதேச விசாரணைப் பொறிமுறையை வலியுறுத்திப் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
இந்தப் போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்கள் உறவுகளின் புகைப்படங்களைத் தமது கைகளில் தாங்கியிருந்ததுடன் எங்கே? எங்கே? உறவுகள் எங்கே?, எமது உறவுகள் எமக்கு வேண்டும், பதினைந்து ஆண்டுகளாக கிடைக்காத உள்ளக நீதி இனியொருபோதும் எங்களுக்கு வேண்டாம்!, பதில் சொல்! பதில் சொல்! சர்வதேசமே பதில் சொல்!, சர்வதேசமே நீதியைப் பெற்றுத் தா! உள்ளிட்ட பல்வேறு கோஷங்களையும் எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.