எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பவர்கள் இந்திய மீனவர்கள் அல்ல: இளங்குமரன் எம்பி புதுக்கதை!

உண்மையாக எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பவர்கள் இந்தியன் மீனவர்கள் அல்ல. இவற்றில் ஈடுபடுவர்கள் பெரிய வட்ட முதலாளிகள்.  இழுவைமடிப் படகுகளின் பாவனை இந்தியாவிலும் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் மீனவர்கள் இதற்கு எதிர்ப்பென யாழ்.மாவட்டத் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கருணநாதன் இளங்குமரன் தெரிவித்துள்ளார்.  

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறு வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டமும் பேரணியும் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (27.02.2025) யாழில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் போராட்டம் நிறைவுபெற்ற பின்னர் போராட்டத்தில் பங்கேற்ற மீனவர் சங்கப் பிரதிநிதிகள் சிலர் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தேசியமக்கள் சக்தியின் அலுவலகத்தில் அவரை நேரடியாகச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இந்தக் கலந்துரையாடலின் போது எல்லைதாண்டி வரும் இந்திய மீனவர்களின் பிரச்சினை சம்பந்தமாக நாடாளுமன்ற உறுப்பினருக்கும், மீனவர் சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் கடும் வாய்த் தர்க்கமும் இடம்பெற்றிருந்தது. 

நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த கலந்துரையாடலில் மேலும் தெரிவிக்கையில்,  இலங்கைக் கடற்பரப்பிற்குள் அண்மையில் எல்லை தாண்டி மீன்பிடித்த போது சுட்டுப் பிடிபட்ட இந்திய மீனவர் ஒருவர் வழங்கிய காணொளிப் பதிவு எம்மிடம் உள்ளது. அதில் தங்கள் நாட்டுக் கடலுக்குள் மீன்கள் அழிந்து போனமையால் தான் எல்லைதாண்டி வந்து மீன்களை அள்ளிச் செல்கிறோம். மீன்களை நாம் பிடிச்சுக் கொண்டு போனால் எங்களுக்குக் கொமிசன். நாங்கள் 13 படகுகளில் பிளான் பண்ணி வருவோம் எனவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். 

உங்களை நம்பி வாக்களித்த எங்களைத் தற்போதைய அரசு நடுத்தெருவில் கைவிட்டுவிட்டது எனவும், 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வடக்கு மீனவர்கள் தொடர்பான ஒரு வார்த்தை கூட உள்ளடக்கப்படவில்லை எனவும் மீனவர் சங்கப் பிரதிநிதிகள் கடுமையாகக் குற்றம் சாட்டினர். அதனை மறுத்த நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் வடக்கு மீனவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு எமது அரசாங்கம் இதயசுத்தியுடன் செயற்படுகிறது எனவும் குறிப்பிட்டார்.