சந்நிதியான் ஆச்சிரம முதல்வரின் சித்திரைப் புத்தாண்டு ஆசிச் செய்தி

உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். சித்திரை முதல் பங்குனி வரை உள்ள மாதங்களும், பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்களுமே தமிழ்ப்புத்தாண்டு ஆகும். இன்று பிறந்தது விசுவாவசு தமிழ்ப் புத்தாண்டு ஆகும். அறுபது வருடங்கள் என ஆண்டு வட்ட முறை ஒழுங்கில் விசுவாவசு    முப்பத்தொன்பதாம் ஆண்டாகும். இந்த ஆண்டைச் செந்தமிழில் 'உலகநிறைவு' எனவும் குறிப்பர்.

சித்திரை மாதத்தின் முதலாம் நாளைத் தமிழ்மக்கள் தொன்மையான காலம் தொட்டுப் பாரம்பரியமானதொரு பண்டிகையாகக் கொண்டாடி வருகிறார்கள்.  சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஆலயங்களில் மூலிகைக் கலவையான மருத்துநீர் வழங்கப்படுகிறது. மருத்து நீரைக் கொண்டு புண்ணியகாலத்தில் நீராடி, புத்தாடை அணிந்து கோவிலுக்குச் சென்று வழிபடுவர். வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப் பொங்கல் பொங்குவார்கள். அதன்பின்னர் பெரியவர்களிடம் ஆசிகள் பெற்றுச் சுப வேளைகளில் தமது தொழில்களில் மக்கள் ஈடுபடுவர். அன்றைய தினம் மாலை வேளையில் உறவினர், நண்பர்கள், அயலவர்கள் வீடுகளுக்குச் சென்று பலகாரங்கள் பரிமாறியும், வாழ்த்துக்கள் பகிர்ந்தும் மகிழும் வழக்கத்தைத் தமிழ்மக்கள் நீண்டகாலமாகக் கடைப்பிடித்து வருகின்றனர். மூத்தவர்கள் இளையவர்களுக்குப் புத்தாண்டு அன்பளிப்பாக வழங்கும் கைவிசேட பாரம்பரியமும் நீண்டகாலமாகக் கைக்கொள்ளப்படுகிறது.  

இலங்கையில் தமிழர்களும்- சிங்களவர்களும் இணைந்து சித்திரைப் புத்தாண்டு நன்னாளைக் கொண்டாடுவது வேறு எந்தவொரு நாட்டிலும் இல்லாத சிறப்பு எனலாம். இன்றைய நாளில் நாட்டில் இன நல்லிணக்கம், மத நல்லிணக்கம் பெருகுவதுடன் தமிழ்மக்கள் தமக்குரிய சகல உரிமைகளையும் பெற்று வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல செல்வச்சந்நிதி முருகப் பெருமானின் திருவருளைப் பிரார்த்திக்கின்றேன். அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களும், ஆசிகளும் உரித்தாகுக.  

செ.மோகனதாஸ் சுவாமிகள் (சாதனைத் தமிழன்) ,   
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர்.