திருடர்கள், ஊழல்வாதிகள் குவிந்துள்ள இடம் தேசியமக்கள் சக்தி!

திருடர்கள், ஊழல்வாதிகள் தற்போது குவிந்திருக்கும் இடமாகத் தேசிய மக்கள் சக்தி காணப்படுகின்றது. மணல் கொள்ளையர்கள், வேறு கட்சியிலிருந்து சென்று திருட்டுத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் போன்றோர் தான் தற்போது இந்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்குள் உள்ளனர். இவர்கள் தான் முறைமையை மாற்றப் போகின்றார்களாம், நாட்டில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்தப் போகின்றார்களாம் என முன்னாள் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் கடுமையாகக் குற்றம்சாட்டியுள்ளார்.  

இன்று செவ்வாய்க்கிழமை (22.04.2025) யாழ்.கொக்குவிலில் சந்தியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கடந்த காலத்தில் மகிந்த ராஜபக்ச மிகக் கொடுமையான ஆட்சியை, ஊழலான ஆட்சியைச் செய்தார் என்றெல்லாம் தேசிய மக்கள் சக்தியினர் தேர்தலுக்கு முன்னர் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்கள். எனினும், மகிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் நடக்காத ஜனநாயக உரிமை மீறல்கள், தேர்தல் விதிமீறல்கள், அநீதிகள் அனைத்தும் தாங்கள் நேர்மையானவர்கள், ஊழலற்றவர்கள் என்று கூறுகின்ற தற்போதைய ஆட்சியில் தான் அரங்கேறிக் கொண்டிருக்கின்ற அவலத்தை நாங்கள் காண்கின்றோம். இந்த அவலத்திலிருந்து எமது மண்ணைக் காப்பாற்ற வேண்டுமெனவும் சுட்டிக்காட்டினார்.