காலநிலை மாற்றங்களை எதிர்கொள்ளத்தக்க வகையில் காலநிலைக்கமைவான விவசாய முயற்சியின் கீழ், சிறுதானியங்கள் மிகப் பொருத்தமான பயிர்த் தெரிவாகும்.
மிகக் குறைந்த உள்ளீட்டுக்களைக் கொண்டு பயிரிடக் கூடியதாக இருப்பதும், மிகக் குறைந்த நீர்த் தேவையுடன் மேற்கொள்ளக் கூடியதாக இருப்பதும், சிறுதானியங்களுக்கான தேவை மற்றும் விலை அதிகமாக இருப்பதும் சிறுதானியச் செய்கைக்கு சாதகமான காரணங்களாக அமைந்துள்ளன.
இந்த அடிப்படையில், வட மாகாணத்தில் சிறுதானியச் செய்கையை ஊக்குவிப்பதற்கான திட்டம் ஒன்றினை வட மாகாண விவசாயத் திணைக்களம் முன்னெடுத்துள்ளது.
இதற்காக மாகாண குறித்து ஒதுக்கப்பட்ட நிதி மூலத்திலிருந்து 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
வட மாகாணத்திற்குட்பட்ட ஐந்து மாவட்டங்களிலிருந்தும் தெரிவு செய்யப்படும் பயனாளிகளுக்கு சிறுதானியச் செய்கையை ஊக்குவிப்பதற்கான நிதி உதவி வழங்க ஏற்பாடாகியுள்ளது.
சாமை, திணை, இறுங்கு, கம்பு, வரகு, குரக்கன் ஆகிய சிறுதானியங்கள் இத் திட்டத்தின் கீழ் ஊக்குவிக்கப்படவுள்ளன.
ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் சிறுதானியச் செய்கையை மேற்கொள்ளும் பயனாளிகளுக்கு ரூபா பதினைந்தாயிரம் ஊக்குவிப்புத் தொகை வழங்கப்படவுள்ளது.
குறைந்தது கால் ஏக்கர் பரப்பில் சிறுதானியச் செய்கையை மேற்கொள்பவர்களும் இதற்காக விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்ப முன்னுரிமை அடிப்படையில் பயனாளர்கள் தெரிவு செய்யப்படவுள்ளார்கள்.
சிறுதானியச் செய்கைக்கான விதை உள்ளீடுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு விவசாயத் திணைக்களம் ஒழுங்குளை மேற்கொண்டுள்ளது.
மேலும், சிறுதானியச் செய்கை தொடர்பான தொழினுட்ப வழிகாட்டல்களையும் விவசாயத் திணைக்களம் வழங்குவதோடு சிறுதானிய உற்பத்தியை சந்தைப்படுத்துவதற்கான ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளது.
சிறுதானியச் செய்கையில் ஈடுபட ஆர்வம் உள்ளோர், குறித்த பிரதேசத்திற்கான விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தரை அல்லது வட மாகாண விவசாயத் திணைக்கள மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலகங்களையோ அல்லது வட மாகாண விவசாயப் பணிப்பாளர் அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளும்படி வட மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் திருமதி. சுகந்தினி செந்தில்குமரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.
வட மாகாண விவசாயத் திணைக்கள மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் அலுவலக தொடர்பு இலக்கங்கள்
யாழ் மாவட்டம் 021-2222175
கிளிநொச்சி மாவட்டம் 021-2285726
மன்னார் மாவட்டம் 023-2222155
முல்லைத்தீவு மாவட்டம் 021-2290006
வவுனியா மாவட்டம் 024-2222324