தமிழர் தாயகத்தின் உள்ளுராட்சி சபைகளைத் தமிழ்த்தேசிய சக்தியாக ஒன்றிணைந்து ஆள அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் முன்வர வேண்டுமென ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
இதுதொடர்பில் ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பு ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்கள் தந்த ஆணைக்குத் தலைவணங்கி இந்தத் தமிழ்மண் தன் சுயநிர்ணயத்தின் பால் கொண்டிருக்கும் உன்னத விருப்பிற்கு 100 சதவீதம் நேர்மையாக, தூய்மையான செயற்திறன்மிக்க மனிதர்களை உள்ளுராட்சியின் தலைவர்களாக, குறிப்பாக பெண்மைக்குச் சரிசமானம் தந்து எங்கும் எதிலும் தமிழ் என்ற சித்தாந்தத்தோடு இந்த மண்ணில் எம் மக்கள் இருப்பை நிலைநிறுத்தும் செயற்திட்டங்களோடு ஒன்றிணைந்த தமிழ்த்தேசிய சக்தியாக ஊரை ஆள முன்வர வேண்டும். மாற்றாரை வைத்தலை விடுத்து நாம் எம் மண்ணிற்காய் இதனைச் செய்து முடிப்போம் எனும் ஓர்மத்தோடு மக்கள் சேவகர்களாய்ப் பணியாற்ற முன்வர வேண்டும்
நாளையும் நலமுடன் தலைநிமிர்ந்து எம் சந்ததி எம் ஊரில் வாழச் சொற்களால் அல்ல செயல்களால் ஆட்சி செய்து காட்ட முன்வருமாறு அனைத்துத் தமிழ்த்தேசியச் சக்திகளையும் கோரி நிற்பதுடன் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களையும், தமிழ்த்தேசியத்தின் பால் அசையாத பற்றுறுதிமிக்க எம் மக்கள் அனைவருக்கும் நன்றியறிதலையும் தெரிவித்து நிற்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.