குறைந்த வளங்களுடன் இயங்கி வரும் யாழ்.ஏழாலை சைவமகாஜன வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவியான ஜெயக்குமார் பவீனா அண்மையில் வெளியான 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் 6 ஏ,பி,சி, எஸ் பெறுபேற்றைப் பெற்றுச் சாதித்துள்ளார். இந்த மாணவி நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (25.07.2025) காலை-08.15 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலையின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் ஆசிரியர் த.ஸ்ரீகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் ஒரு லட்சம் ரூபா பணப் பரிசில் வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்.
இந் நிகழ்வில் தற்போது லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் ஏழாலை வடக்கைச் சேர்ந்தவரும், பழைய மாணவருமான தம்பிராசா கிருபாகரனின் நிதிப் பங்களிப்பில் சிறந்த பெறுபேறு பெற்ற மாணவி ஒரு லட்சம் ரூபா காசோலை வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் பாடசாலையின் பதில் அதிபர் திருமதி.சசி ரஜனி குகானந்தன், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், நன்கொடையாளரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, குறித்த மாணவிக்கு ஒன்றரை வயதாகவிருக்கும் போது தந்தையார் வெளிநாடொன்று செல்வதற்காகச் சென்ற நிலையில் காணாமற் போயிருந்த நிலையில் மாணவி தாய் மற்றும் அம்மம்மாவின் அரவணைப்பில் வாழ்ந்து வருகின்றார். தாய் அன்றாடம் கூலி வேலை செய்து உழைத்தே தனது மகளைப் பராமரித்து, கல்வி கற்பித்து வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.