யாழ்.நகரத்தில் பிரபல உணவகத்தின் மோசமான செயல்: வழக்குத் தாக்கல் செய்ய நடவடிக்கை!

யாழ் நகரம் 24 ஆம் வட்டாரத்தில் தாராக்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகமொன்றிலிருந்து கழிவுநீர்கள் துர்நாற்றத்துடன் வெள்ளவாய்க்காலில் வெளியேற்றப்படுவது  கடந்த பல மாதங்களாகத் தொடர்ச்சியாக நீடித்து வருகிறது.    

இதுதொடர்பில் அப்பகுதிப் பொதுமக்களால் யாழ்.மாநகர சபையின் வட்டார உறுப்பினர் இரத்தினம் சதீஸிற்கு மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய இன்று சனிக்கிழமை (19.07.2025) மாலை கழிவுநீர்கள் வெளியேற்றப்படும் பகுதியை நேரில் பார்வையிட்டுள்ளார். இதுதொடர்பாக உடனடியாக யாழ்.மாநகர சபையின் முதல்வருடன் யாழ்.மாநகர சபை உறுப்பினர் சதீஸ் தொடர்பு கொண்டு தெரியப்படுத்தினார்.

இந் நிலையில் குறித்த இடத்திற்கு விரைந்து சென்ற யாழ்.மாநகர சபையின் சுகாதாரக் குழுத் தலைரும், மாநகரசபை உறுப்பினருமான சாருஜன் மற்றும் மாநகரசபை உறுப்பினர் மதுசிகான் ஆகியோருடன் சேர்ந்து இதுசம்பந்தமாக கலந்துரையாடியுள்ளனர். இதனையடுத்து மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் அவ்விடத்திற்கு வரவழைக்கப்பட்டுக் கழிவுநீர்கள் வெளியேற்றப்பட்ட பகுதி நேரடியாகப் பார்வையிடப்பட்டது. 

சம்பந்தப்பட்ட உணவகத்தின் முகாமையாளருடன் கலந்துரையாடியதன் அடிப்படையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (22.07.2025) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் இவ் விடயம் சம்பந்தமாக வழக்குத் தாக்கல் செய்வதென யாழ்.மாநகர சபையின் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.