மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துமாறு பவ்ரல் வலியுறுத்து!

நீண்டகாலமாக நிலுவையிலுள்ள மாகாண சபைத் தேர்தலை மேலும் தாமதமின்றி நடாத்துமாறு பவ்ரல் அமைப்பு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

இறுதியாக 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம்-20 ஆம் திகதி ஊவா மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றதுடன் அதன் பின்னர் 11 வருடங்களாக எந்தவொரு மாகாணசபைத் தேர்தலும் நடைபெறவில்லை எனவும்  சுட்டிக்காட்டியுள்ளது.

இதுதொடர்பில் பவ்ரல் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    

நல்லாட்சி அரசாங்கத்தில் மாகாண சபை மற்றும் தேர்தல் திருத்தச் சட்டம் ஊடாக மாகாணசபைத் தேர்தல் முறைமை திருத்தப்பட்டமையும், அது தொடர்பான சட்ட ஏற்பாடு மற்றும் எல்லை நிர்ணயச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமையும் மாகாணசபைத் தேர்தலைத் தாமதப்படுத்தியுள்ளது.

தற்போதுள்ள சட்டத்தின் படி ஒவ்வொரு ஆறு வருடங்களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், எனினும், அடுத்தடுத்த அரசாங்கங்கள் தேவையான சட்ட மற்றும் நிர்வாகச்  செயல்முறைகளை முன்னெடுக்கத் தவறியுள்ளன. தற்போதைய அரசாங்கம் இந்த தேர்தல் தாமதத்துக்குப் பொறுப்பல்ல என்ற போதிலும் தேர்தலை நடத்துவதிலுள்ள தடையை நீக்கித் தேர்தலை நடத்த வழிவகுப்பது அதன் பொறுப்பாகும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான சட்டத்திருத்தத்துக்காக தற்போது, இரண்டு தனிநபர் பிரேரணைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. எனவே, விடயத்துக்குப்  பொறுப்பான அமைச்சர் அது குறித்து ஆராய்ந்து, அவசியமான திருத்தங்களை மேற்கொண்டு, அடுத்த வருடத்தின் ஆரம்பத்தில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாகாண சபை முறைமை தொடர்பில் அல்லது மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஏதேனும் சிக்கல் இருப்பின் அது குறித்து விரைவில் கலந்துரையாடித் தீர்க்க முடியுமெனவும் பவ்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது.