மண்கும்பான் பிள்ளையார் கோவில் சுற்றாடலில் பாரிய தீ அனர்த்தம்!

புதன்கிழமை (27.08.2025) இரவு-07 மணியளவில் யாழ்ப்பாணம் தீவகம் மண்கும்பான் பிள்ளையார் கோவில் சுற்றாடல் பகுதியில் அமைந்துள்ள காணியில் பாரியளவிலான தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.  

இந் நிலையில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர்களான மண்கும்பான் பிரபு, கருணாகரன் நாவலன் ஆகியோருடன்  அப் பகுதிப் பொதுமக்களும் இணைந்து மேலும் தீ பரவாதிருக்கும் வகையில் தற்காப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர். பின்னர் இவர்களுடன் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர்களான ஜெ.அனுசியா, கேதீஸ்வரன் ஆகியோரும் இணைந்திருந்தனர். 

இந் நிலையில் வேலணைப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன் உடனடியாக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கை.சிவகரனைத் தொடர்பு கொண்டு இதுதொடர்பில் தகவல் வழங்கிய நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து தீயணைப்புப் படைப்பிரிவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்களின் வாகனமும் வேலணைப் பிரதேச சபையின் பௌசரும் இணைந்து கடுமையாகப் போராடி  இரவு-10 மணியளவில் தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இது காணி உரிமையாளரின் திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாமென மக்கள் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். 

இதேவேளை, சில வாரங்களுக்கு முன்னர் இவ்வாறான பாரியதொரு தீப் பரவல் அல்லைப்பிட்டிப் பகுதியில் ஏற்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.