ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமையால் மனமுடைந்த யாழ்.குப்பிழானைச் சேர்ந்த 30 வயதான இளம் குடும்பஸ்தர் இன்று சனிக்கிழமை (11.10.2025) அதிகாலை தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பொது சுகாதார சேவை முகாமைத்துவ உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த தங்கராசா ராஜ்குமார் (வயது- 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளம் குடும்பஸ்தர் திருமணமாகி மூன்று வருடங்களான நிலையில் மனைவி மற்றும் ஒரு பிள்ளையுடன் வாழ்ந்து வந்தார். இந் நிலையில் ஒன்லைன் வர்த்தகத்தில் ஒரு கோடி ரூபா நட்டம் ஏற்பட்டமையால் மன விரக்தியடைந்த நிலையில் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்றுச் சோதனைகளைத் தொடர்ந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேவேளை, மேற்படி சம்பவம் யாழ் குப்பிழானில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.