யாழின் பல இடங்களிலும் இன்று யோகர் சுவாமிகளின் 62 ஆவது குருபூசை நிகழ்வு

ஈழத்துச் சித்தர் தவத்திரு.யோகர் சுவாமிகளின் 62 ஆம் ஆண்டு குருபூசை நிகழ்வுகள் பங்குனி ஆயிலிய நட்சத்திர நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (29.03.2026) யாழ்.மாவட்டத்தின் பல்வேறிடங்களிலும் இடம்பெறவுள்ளன.

இன்று காலை-09 மணியளவில் யோகர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு கொழும்புத்துறையிலுள்ள யோகர் சுவாமிகளின் சமாதிக் கோவில் வளாகத்தில் இடம்பெறும். நற்சிந்தனைப் பாராயணத்துடன் சுவாமிகளின் திருவடிக்கு அபிஷேகம் இடம்பெற்றுத் தொடர்ந்து பூஜை வழிபாடு நடைபெறும். அதனைத் தொடர்ந்து அடியவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும்.   

இதன்போது வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட நற்சிந்தனைப் பாராயணப் போட்டி, பேச்சுப் போட்டிகளில் வலய மட்டத்தில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கான  பரிசில்கள் வழங்கப்படும். அத்துடன் வலய மட்டத்தில் முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களின் நற்சிந்தனைப் பாடல்களும், பேச்சுக்களும் இடம்பெறுமெனக் கொழும்புத்துறை யோகர் சுவாமிகளின் சமாதிக் கோவில் அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய நிர்வாகத்தின் ஏற்பாட்டில் யோகர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு இன்று முற்பகல்-10 மணியளவில் நல்லூர் ஸ்ரீதுர்க்கா மணிமண்டபத்தில்  நடைபெறும். இந் நிகழ்வில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியின் ஆசிரியர் கலாநிதி.ஏரம்பமூர்த்தி அனுஷாந்தன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுவார்.      

இதேவேளை, அளவெட்டி ஶ்ரீ சுப்பிரமுனிய ஆச்சிரமம், ஶ்ரீ பசுபதீஸ்வரர் கோயிலில் யோகர் சுவாமிகளின் குருபூசை நிகழ்வு இன்று மாலை-04.30 மணியளவில் நடைபெறும்.  


.